கால நதிக்கரையிலே
வைகறைப் பொழுதிலே
குரங்கென்ற குறியீடின்றி
கூன் நிமிர்ந்து நடக்கையில்
அறியாமை இருளுமே
மெல்ல விலகியதே
பொல பொலவென விடிந்தது
பூகோளம் பௌதீகம் புரிந்தது
நீர் நெருப்பின் பயன் தெரிந்தது
வாழ்வின் சுவை கூடிப் போனது
ரசமான நாடகமாய் ஆனது
எம்பி மனிதன் குதித்த போது
வானம் தலையில் இடித்தது
நிலவைத் தாண்டி பயணமாகுது
இசைவான இயல்பொழித்து
இயற்கை ஏனோ சீறுது
தாயாய் தாங்கிட மறுக்குது
பேயாய் மாறி டுது
பெய்தும் கொல்லுது
பெய்யாமலும் கொல்லுது
பூவை பிஞ்சை தீ நாக்கு விழுங்குது
புரியாத புதிர்களோ
பழைய பழி கணக்குகளோ
புத்திக்கு எச்சரிக்கையோ
போதைக்கோர் மாற்றோ
புது உலகம் சமைக்கவோ
கால நதிக் கரையிலே
அலையின் சலனங்கள்
அதிலுண்டோ அர்த்தங்கள்
ஆடுகின்ற ஓடங்கள்
தேடுகின்ற பாடங்கள்
தீராத தாகங்கள்
ஓயாத மோகங்கள்
நில்லாத போகங்கள்
சொல்லாத சோகங்கள்
வெல்லாத இலக்குகள்
ஏனிந்த சம்பவங்கள்
விடை எங்கே
விடுதலை எங்கே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment