Wednesday, March 17, 2010

கடவுள்

கற்றது கையளவு கல்லாதது
உலகளவு என்றார் ஔவை,
புரிந்தது கடுகளவு புரியாதது
கடலளவு - எல்லோர் அனுபவம்;
பிறந்த குழந்தை இறப்பதேன்?
பிள்ளைப் பேறே இல்லாததேன்?
பிறவியில் ஊனமேன்?
அழகும் அறிவும் அரிதாய் இணைவதேன்?
இயற்கை சீறி அழிப்பதேன்?
பஞ்சம் வந்து வாட்டுவதேன்?
பகையும் போரும் நிகழ்வதேன்?
பிரிவும் துயரும் நேர்வதேன்?
குருவிக்கூடு கலைவதேன்?
பொல்லாத சோகம் வருவதேன்?
போகத்துடிப்போர் போவதில்லை,
வாழத் துடிப்போர்க்கு ஆயுளில்லை,
போட்ட கணக்கு தவறுகின்றது,
கொடியவர் திளைக்க, நல்லவர் துவள
சகியாத அக்கிரமங்கள் அரங்கேற
ஆண்டவன் இருக்கிறானா என்றரற்ற-
தடுமாறும் தருணங்கள் தரணியில்
எத்தனை எத்தனையோ!
எண்ணற்ற கேள்விக்கு விடையில்லை,
ஆனால் “அடடா இதற்காகத்தானா?”
என்று வியந்து சமாதானமாய் ஆக்கிய
சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் தாராளம்-
ச்சில்லச்சிஇரத்தில், பல பல்லாண்டு கழித்து;
சிக்கலான கணக்கானாலும் சீரான விடையுண்டு,
சிடுக்கான கூந்தலையும் சீவி முடிக்க வழியுண்டு;
நாடகத்தின் பாத்திரங்கள் நடிப்பதெல்லாம்
ஒத்திகை முடிந்த சரித்திர காவியங்கள்;
நுட்பமாய் பார்க்கையிலே பொம்மைகளாய்
ஆடுகிறோம் -சூத்திரதாரி இல்லாமலா?
நம் நலனை நினைக்கும் நல்லவன்
லயம் பிசகாத நியதி தப்பாத
பெருந்திட்டம் வகுத்தவன்
அணுவுக்குள் அடங்கி அண்டம் முழுதும் நிறைந்து
ஆடும் குழந்தையை கவனமாய் கண் எல்லைக்குள்
ஆடவிட்ட அளப்பறிய முடியா அன்புடைத் தாயாய்
பாலுக்குள் வெண்ணெய்யாய் ஒளிந்திருந்து
பம்பரமாய் ஆட்டிவிட்டு பார்த்திருக்கும்
பரமனை என் நாடியிலே, ஓடுகின்ற குருதியிலே,
விடுகின்ற மூச்சிலே இரண்டற கலந்தவனை
நான் ஆடிக்களைக்க காத்திருப்பவனை
காலுக்கு செருப்பாய் வெயிலுக்கு குடையாய்
காப்பவனை சாய்ந்து அழ தோள் கொடுப்பவனை
மௌனமாய் என் குறைகள் கேட்பவனை
ஔடதமாய் இருப்பவனை லயத்தில் இல்லாதவனை
அன்பான ஒரு சொல்லிலே, செயலிலே,
பார்வையிலே, சிந்தனையிலே
தரிசனம் தருபவனை தேடுவதோ?
காணாது வாடுவதோ?
பேரில்லா பெரியவனை
பெருவெளியில் நிறைந்தவனை
அருகே அமர்த்திக் கொள்ள
அளவளாவி அகமகிழ பயின்றிடு
அன்பின் மொழி நடந்திடு
அறத்தின் வழி ஒழிந்திடும்
பிறவி வலி, நானின் முகவரி.
ஆயுளுக்கும் பாதிப்பை தருகிறது,
பிரிந்ததேன்? இழந்ததேன்?
வாழ்வின் அர்த்தம் புதிரானதேன்?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community