Tuesday, March 2, 2021

கரை ஏறும் தீவுகள்

IndiBlogger - The Indian Blogger Community சுற்றிலும் கடல் சூழ்ந்திருக்க
சுகமாய் கிடந்த தீவுகள்
பத்திரமாய் பரிசுத்தமாய்
ஆபரணமாய் ஆதாரமாய்
ஆனந்தமாய் ஆதுரமாய்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அகழியென பாதுகாக்க
பொலிவுடன் புவி காத்த
தாய்மை பீடங்களின்று
கரை ஏறும் தீவுகள்

உயிரே


சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து
வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து
கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து
எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து
புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து
களங்கள் கடந்து கனவாய் கரைந்து
இறகுகள் முளைத்து இலகுவாய் பறந்து
நினைவுகள் நிலைக்க அகலும் உயிரே

Sunday, February 28, 2021

இயற்கை நியதி

IndiBlogger - The Indian Blogger Community மாசி மாசமிதில்
வேப்பமரத்தடியில்
கூடை கூடையாய்
கொட்டிக்கிடக்கு
காய்ந்து உதிர்ந்த
சருகான இலைகள்
அன்னாந்து பார்த்தால்
அனைத்து கிளையிலும்
குச்சி நுனியிலும்
கொழுந்து இலைகள்
சித்திரையில் நிச்சயம்
காற்றில் நிறையும்
வேப்பம்பூவின் நறுமணம்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
மரபென உணர்த்தி
இறப்பவர் இறக்க
பிறப்பவர் பிறக்க
இயங்குது அழகாய்
இயற்கை நியதி

Friday, September 25, 2020

என் அஞ்சலி

IndiBlogger - The Indian Blogger Community

பாடப் பிறந்தேன்

சிறகை விரித்தேன்

வானை வளைத்தேன்

என் இசை கொம்புத் தேன்

குழைந்தேன் கொஞ்சினேன்

இழைந்தேன் இளகினேன்

சிரித்தேன் சீண்டினேன்

சித்து வேலை செய்தேன்

இதய நரம்பை மீட்டினேன்

எல்லா உணர்வும் தொட்டேன்

தட்டி எழுப்பினேன் உற்சாகத்தை

தாலாட்டி உறங்க வைத்தேன் சோகத்தை

எழு ஸ்வர நாயகன்

நாத பிரம்ம வித்தகன்

இசையின் ரசிகன்

இமாலய சாதகன்

அடித்தேன் என்றும் ஆனந்த கும்மி

யாரோடும் சேரும் ஜோரான ரம்மி

திகட்டாத ராகங்கள்

தெய்வீக பாவங்கள்

தீராத விருந்துகள்

வற்றாத அருவிகள்

 

மூச்சு விடாமல் பாடினேன்

முழு வானை கடந்துவிட்டேன்

களைத்த சிறகை மூடுகிறேன்

களிப்புடனே தூங்கப்போகிறேன்

Saturday, August 8, 2020

வீடு நோக்கி

IndiBlogger - The Indian Blogger Community
துபாய் விமான நிலையத்தை அடைந்தவுடன் அம்மாவை அழைத்து கிளம்பி விட்டேன் என்று தகவல் சொன்னேன். அம்மாவின் குரலில் அப்படியொரு சந்தோஷம். அது என் காது வழியே நுழைந்து உடம்பு முழுக்க பரவி என்னை பரவசத்தில் மிதக்கச் செய்தது.
என் வாலிபத்தின் பல வருடங்களை வியர்வையாக்கி நிறைய சம்பாதித்துவிட்ட நிறைவோடு என் நாட்டுக்கு, என் வீட்டுக்கு, அந்த கதகதப்பான கூட்டுக்கு திரும்புகிறேன்.
நண்பர்களுடன் கும்மாளமாய் காடு கழனிகளில் கொட்டும் பருவ மழையில் குளித்து களித்து கொட்டமடிக்கப் போகிறேன். கனவுகளில் மூழ்கி விட்டதால் வழக்கமாய் விமானத்தில் சக பயணிகளை கவனிக்கும் ஆர்வம் கூட குறைந்திருந்தது.
இதமான குளிரும் வானத்தில் பயணிக்கும் சுகானுபவமும் முக்கால்வாசிக்கு மேற்பட்டோரை உடனடியாக உறங்க வைத்துவிடும். தூக்கம் வராமல் ஒரு வெளிநாட்டு மாது டிவியை போட்டு படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வயதான பெண்மணி இறங்குவதற்குள் முடித்துவிட வேண்டுமென்ற குறிக்கோளோடு ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு நடுத்தர வயதுக்காரர் தீவிரமாக சுடோக்கு போட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு சின்னப்பையன் பகாசுர பசியோடு எதையாவது தின்றுகொண்டேயிருந்தான். ஜன்னலருகே அமர்ந்திருந்த யுவதி கண்களில் கனத்த சோகத்தோடு வெளியே வெற்றுவெளியை வெறித்துக்கொண்டே வந்தாள். அட்லஸ் போல் தோளில் பூமியை சுமந்து கொண்டிருந்தவளின் பாரத்தை வாங்கிக் கொள்ளுமாறு மனதுக்குள் பரமபிதாவிடம் விண்ணப்பம் வைத்துவிட்டு நான் என் கனவுகளில் மூழ்கினேன்.
ஊருக்குத் திரும்பியதும் செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள் பட்டியலிடத் துவங்கினேன். ஒரு குயர் நோட்புக் போதாது போலிருந்தது!
அம்மாவின் நாள்பட்ட மூட்டுவலிக்கு நல்ல வைத்தியம் பார்க்கவேண்டும். ஓயாது உழைக்கும் அப்பாவின் வேலைப் பளுவை குறைக்க வேண்டும். பழைய வீட்டை மராமத்து செய்து புதுப்பிக்க வேண்டும்.
எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வைத்திருக்கிறார்கள். ஒரு லட்சிய ஆண்மகனாக என் மண வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது என் அவா. அதற்கு நிறைய திட்டமிடலும் அதிக பொறுமையும் வேண்டும்.
நல்ல வேளையாக தங்கம் விலை கிடுகிடுவென உயரும் முன்னரே ஓரளவு நகைகளை வரப்போகிறவளுக்காக வாங்கிவிட்டேன். வீடு நிறைய பிள்ளைகள் இருந்தால் குதூகலம். ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாது.
இம்மாதிரியான பல்லாண்டு திட்டங்களில் என் சொந்த விருப்பங்கள் சில உண்டு. அதில் ஒன்று என்னதான் ஒரு சாமான்யன்தான் நான் என்றாலும் என் சுய சரிதையை எழுத ஆசையாய் இருக்கிறது. என் வாழ்க்கை அனுபவங்களை, அனுமானங்ளை, அபிலாட்சைகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.
நல்லெண்ணம் கொண்டோரை குழுக்களாக அமைத்து மரம் வளர்த்தல், குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கி பராமரித்தல், சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், ஆதரவற்றோரை, முதியோரை பாதுகாத்தல், அநியாயங்களை தட்டிக்கேட்டல் என நான் ஆற்ற விரும்பும் பணிகள் எண்ணிலடங்காது.
அடடா, என் கனவுகளில் மூழ்கியிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஊர் வந்துவிட்டது. விமானம் தரையை தொட்டுவிட்டது.
துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்துவிட்டது!
நான் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரம் வீட்டை அடைவேனென்று!!!

Friday, July 3, 2020

பாரீர் பாரீர்

IndiBlogger - The Indian Blogger Community பாரீர் பாரீர் பாரெனும் நாடகமேடையில்
பவுமானமாய் அரங்கேறும் பூனை நடையினை
திருப்தியின் திசை தெரியா பேராசைக்காரர்
ஈகையின் ஈரம் அறியா சுயநலவாதிகள்
பகையை மறைத்து பல்லை இளிக்கும் பாசாங்குக்காரர்
கண்ணை விற்று ஓவியம் வாங்கும் மூடர்கள்
கதையை திரித்து கல்லா கட்டும் ஊடகக்காரர்
விரசம் நாடும் சிற்றின்ப சித்தர்கள்
அதிகார மமதையில் ஆடும் அதிகாரிகள்
ஆன்மீக போர்வையில் திளைக்கும் காமுகர்
பண்பாடுகளை பறக்கவிடும் புரட்சியாளர்
உறவுக்கு புதுப் புது அர்த்தங்கள் சொல்லும் மேதைகள்
புனிதத்தை கடைச்சரக்காக்கும் பேதைகள்
தூண்டிலில் சிக்கும் மீன்கள் விளக்கில் வீழும் விட்டில்கள்
மக்கள் சேவை செய்ய வந்த பொய்யர்கள்
மந்தைகளாய் ஆக்கி கொழுத்த கபடதாரிகள்
கஜானாவை நிரப்புகின்ற சிறந்த குடிமகன்கள்
செல்ஃபோனுடனே வாழுகின்ற தனித்தீவுகள்
கொட்டிக்கிடக்கும் இயற்க்கை அழகை ரசிக்காத ஜன்மங்கள்
கணம் கணமாய் வாழ்க்கைத் தேனை ருசிக்காத ஜீவன்கள்
வேடிக்கை மாந்தரின் விந்தையான அணிவகுப்பு
கேளிக்கை ஆனதோ விலையில்லா வாழ்க்கையிங்கு

Wednesday, June 3, 2020

அனாத்மா

IndiBlogger - The Indian Blogger Community
எந்த சித்தாந்ததிற்குள்ளும் சிக்கிவிடாமல் சௌக்கியமாக நழுவி ஓடிக்கொண்டிருக்கும் நான் இன்று முதன்முறையாக ‘அனாத்மா’ என்ற வார்த்தையை கீதை உரையில் கேட்டேன்! கிர்ரடித்த தலைக்குள் உதித்த கவிதை:

ஹே, ஆத்மாவே!
நிழலும் நிசமும் போல்
என்னோடு ஒட்டியிருப்பவனே!
நிச்சயமாய் சதிபதியாய்
நகமும் சதையுமாய் நாமில்லை
பசியறியாய் ருசியறியாய்
பனியில்லை வெயிலில்லை
கண்டித்தாயா கை தட்டினாயா
கூட அழுதாயா கூடி களித்தாயா
தாமரை இலை நீர் போல் நீ
ஒட்டாமல் ஒதுங்கி நிற்கிறாய்
லௌகீகத்தில் உருண்டு புரள்கிறேன்
ஒய்யாரமாய் மோன தவத்தில் நீ
பந்தபாசத்தில் பிணையும் ஏக்கம் எனக்கு
பரமாத்மாவில் இணையும் நோக்கம் உனக்கு
விசித்திரமான ஒட்டுண்ணியே உடும்பே
யாருக்கு வந்த விருந்தோ என இருக்கின்றாய்
வசிக்க ஒரு வாடகை வீடோ நானுக்கு
அனாத்மா என்னுடன் நீ உறைய காரணமென்ன
அகமெனை அழிக்க சதியோ
பிரம்மத்தில் சேரும் விதியோ
பெரிய கேள்விக்கு பதிலென்ன
சிறிய மூளைக்கு புரிவதெப்போ
IndiBlogger - The Indian Blogger Community