Friday, August 23, 2019

பதறுதே நெஞ்சம்


பதறுதே நெஞ்சம் ஈரக்குலை நடுங்குதே
பற்றி எரியுதே பசுமைகாடொன்று
தானாய் எரியவில்லை
எளிதாய் எரிந்துவிடாத அடர்வனமது
தென்னமரிக்க அமேசான் காடானது
காசாசை பைசாசமாய் பிடித்தாட்ட
பதவியிலிருப்போர் பச்சைக்கொடி காட்ட
பாதகச்செயலொன்று அரங்கேறுதே
பச்சைவனங்களின்று கொளுத்தப்படுதே
ஊழித்தீயொன்று பகாசுரப்பசியுடன்
விழுங்குதே வனவிலங்குகளை வண்ணப்பறவைகளை
நீந்துகின்ற அபூர்வ வகை உயிரினங்களை
வாயில்லா ஜீவன்கள் செய்த பாவமென்ன
நரகத்தீயில் வெந்து சாம்பலாவதற்கு
அறிய வகை பல்லுயிரும் பரிதாபமாய் எரியுதே
ஐயகோ! ஆதிகாலந்தொட்டு ஆங்குரையும்
நவீன நாகரிகத்தின் கறைபடியா பழங்குடியும்
பலியாகும் அக்னி குண்டம் அல்லவோ
வேள்வியிது வெட்கக்கேடு வேதனை
பூமிக்கோளத்தின் சுவாசப்பையை கிழித்து
எந்த சுகமான காற்றை சுவாசிப்பாரோ
எந்த செல்வ செழிப்பில் மிதப்பாரோ
ஆடுமாடு மேய்க்க பயிரிட்டு பணத்தையள்ள
பரந்த நிலம் வேண்டி பாதகமிதுவென்னவோ
பச்சைக்காட்டை அழிப்பதா பாலைவனம் தேவையா
இயற்கை பெருங்கொடை அறியா மூடரா
மழைத்துளி இலகுவாய் இறங்க இயலாத
சூரிய ஒளியும் உட்புகவொண்ணாத கருங்கூரையது
அந்தோ எரியுதே! வெந்து தணிந்தது காடென்று
இதையா சொன்னாய் என் புதுமைக்கவியே?
கூசாத பெரும்பாவமிதை கரும்பாறை நெஞ்சந்தான்
செய்ய துணிந்துவிட்ட வேளையிலே
அநியாயமாய் சுவாசக்காற்றை இழக்க
நாமும் நம் சந்ததியும் அல்லலுற
சொல்லொணா துயரம் கொள்ள
கைகட்டி பார்த்திருப்போமோ
இறையே நரகத்தீயில் உலகை அழிப்பதுதான்
உன் திருவுளமோ எமதூதரை ஏவினாயோ
பசுங்காட்டையும் பல்லுயுரையும் கொளுத்திட
ஏனிந்த சோதனை மரண வேதனை
இன்னலின்றி வாழவிடு
சக்தி கொடு தீதினை எரிக்க

IndiBlogger - The Indian Blogger Community