Monday, June 18, 2018

போரும் அமைதியும்

IndiBlogger - The Indian Blogger Community
போரும் அமைதியும்
வீட்டிற்குள் நுழைந்ததுமே ஒரு ஆபத்தான சூழ்நிலை அறிகுறியை உணர்ந்தான். காற்றிலேயே ஒரு இறுக்கம் விரவிக்கிடந்தது. வழக்கமில்லாத நிசப்தம் புயலுக்கு முன் திரளும் கரு மேகங்கள் போல் போருக்குக் கட்டியம் கூறுவதாய் இருந்தது.
கொஞ்ச காலமாகவே தன் மனைவியின் போக்கில் ஒரு விரோதத்தன்மை இருப்பதை கவனித்தான். அவள் சுபாவத்துக்கு மாறான ஒட்டாத தன்மையின் காரணத்தை அவனால் அனுமானிக்க முடியவில்லை. அவள் இப்படி இருந்து அவன் பார்த்ததேயில்லை.
இயற்கையிலேயே அவள் கலகலப்பானவள். வேடிக்கையும் விளையாட்டும் அவளுக்கு பிடித்தமானது. திடீரென மௌனமாக சிந்தனைவயப்பட்டவளாய் மாறிவிட்டாள்.
அவனிடம் விரோத மனப்பான்மை கொண்டிருந்ததோடு அடிக்கடி அவன் பக்கம் காட்டமான பார்வையை வீசிக்கொண்டிருந்தாள். ஏதோ பயங்கரமாய் நடக்கப்போகிறது என்று அவன் உள்ளுணர்வு சொல்லியது. ஆனால் ஏன் இந்த மாற்றம் என்று அவனுக்கு சுத்தமாய் தெரியவில்லை.
அவர்களுடைய நீண்ட கால காதலையும், அது கனிந்து இனிய திருமண வாழ்க்கை துவங்கியதையும் அவள் அவன் மேல் காட்டிய அளவில்லா பிரியத்தையும் ஏக்கத்துடன் எண்ணிப்பார்த்தான். பரிமாறிக்கொண்ட அர்த்தமில்லாத காதல் பிதற்றல்களையும் அடித்த லூட்டிகளையும் நினைத்துப்பார்ப்பது அவனுக்கு பிடித்தமான விஷயம்.
அவளை ஒரு மகாராணி போல் அவன் நடத்தினான்; அவளும் அவனை தன் கதாநாயகனாகவே கொண்டாடினாள். ஆனந்தமயமாயிருந்தது அவர்கள் வாழ்க்கை. பரஸ்பர புரிதலுடன் இரண்டு ஆன்மாக்களின் லட்சிய சங்கமமாயிருந்தது அவர்கள் பொருத்தம்.
அத்தனையும் திடீரென கனவாக மாறி இன்றைய தாங்க முடியாத அவல நிலையில் வந்து நிற்கிறது. தங்களுக்குள் என்ன தவறு நடந்திருக்குமென எவ்வளவு முயன்றும் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சமாதானத்திற்கான அவனுடைய முயற்ச்சிகள் வீணாயின. அவளுடைய பிடிவாதமான பாராமுகம் கொல்வதாயிருந்தது.
ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அவன் உள்ளுணர்வு சொல்லியது. அவ்வளவு இறுக்கமிருந்தது காற்றில். டைம் பாம் வயர் எதையும் மிதித்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன் அவளை மெல்ல அணுகி அழைத்தான்.
அடுத்த கணம் அவள் துள்ளி எழுந்தாள். அடக்க முடியாத கோபத்தில் அவள் தளிருடல் ஆடியது. பைத்தியம் பிடித்தவள் போல் அவள் கத்தத் துவங்கியதும் அவன் அதிர்ந்து போனான்.
“போதும். இதற்கு மேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லாம் முடிந்துவிட்டது. நான் போகிறேன்.”
“அன்பே! தயவு செய்து...”
அவன் மேல் பாய்ந்தாள்:”போதும் உங்கள் பசப்பு வார்த்தைகள். அவை எனக்கு எரிச்சலூட்டுகின்றன. இப்போது நான் உன்னிடம் மயங்கி விழுந்த சிறு பெண் அல்ல. மோசக்கார பாவி! உன் அழகிலும் தேனான பேச்சிலும் கவரப்பட்ட அப்பாவி சிறுமியாக இருந்திருக்கிறேனே!”
“இவ்வளவு கடுமையான வார்த்தைகளை கொட்டும்படி என்ன தவறு செய்தேன், என் பிரியமானவளே?”
அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. “ராஜகுமாரனைப்போல் வந்தாய், ஆயிரம் பொய்களால் வாக்கு கொடுத்து என்னை ஏமாற வைத்துவிட்டாய்..”
“உன்னை இப்போதும் உயிராய் நேசிக்கிறேன், அன்பே!....”
அவனை அவள் முடிக்கவிடவில்லை. “நீ ஒரு மிக மோசமாமான ஆணாதிக்கவாதி!”
ஒத்திகை பார்த்திருப்பாளோ அத்தனையையும் என்று உள்ளுக்குள் நடுக்கத்துடன் வியந்தான்.
“மிக மோசமான ஆணாதிக்கவாதியா?” என வினவினான் பரிதாபமாக.
“தெரியாதா உனக்கு? திமிர் பிடித்த, அறிவுகெட்ட முட்டாளே!”
“உண்மையாகவே எனக்கு புரியவேயில்லை” குழப்பத்துடன் பிதற்றினான்.
கோபமாய் தொடர்ந்தாள்,”உனக்கு புரியாது, உன்னால் என்னை புரிந்துகொள்ளவே முடியாது! இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டில் என்னை அடைத்து வைத்து, கட்டிப்போட்டு என் சுதந்திரத்தை என் தனி ராஜ்ஜியத்தை தர மறுக்கிறாய்!”
வன்மத்துடன் அவன் மேல் வீசப்பட்ட குற்றச்சாட்டுக்களால் ஆடிப்போனான். அதிர்ச்சியில் பேச்சின்றி உறைந்து நின்றான்.
“பெண்களாகிய நாங்கள் உங்கள் உதவியில்லாமல் சௌகரியமாக, சந்தோஷமாக, எங்கள் விருப்பப்படி அமைதியாக வாழா முடியாது என்று நினைக்கிறாய்! உலகம் பெரியது; வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்தில், பெண் சுதந்திரம், சமத்துவம், ஆளுமை நிறைந்த இந்த யுகத்தில் பெண்களால் உலகை இஷ்டம் போல் செலுத்த முடியும்!”
“ஆம், எனக்கு தெரியும். அதெல்லாமே உண்மைதான்,” என்றான் அடக்கமாய்.
“இல்லை! உனக்கு தெரியாது, தலைக்கனம் பிடித்தவனே! உங்கள் ஆதரவும், பாதுகாவலும் இல்லாவிட்டால் பெண்கள் நாங்கள் பட்டினியால் செத்துவிடுவோம் என்று நம்புகிறாய்! நீங்கள் சம்பாதிப்பவர்கள், எங்களுக்கு உணவும், உறைவிடமும் கொடுப்பவர்கள். அதுதானே உன் எண்ணம்?”
“உனக்கு என்னாயிற்று, என் பிரிய சகியே? ஏன் இப்படி ஆத்திரப்படுகிறாய்?” என்றான் பாவம் போல.
“ஆஹா! பிரமாதமாய் நடிக்கிறாய்! நான் ஏன் கோபமாயிருக்கிறேன் என்று உனக்கு தெரியாது, அப்படித்தானே? அப்பாவி போல் நாடகமாடாதே! மிருகம் போல் நடந்து கொண்டு யோக்கியன் போல் பேசுகிறாய்!”
“தயவு செய்து அபாண்டமான வசவுகளை விட்டுவிட்டு என்னதான் சொல்ல வருகிறாய் என்று விளக்க மாட்டாயா?” அவன் வலியும், வேதனையும் வார்த்தைகளில் தெரிந்தது.
“ஆஹா! பச்சை குழந்தை நீ! அப்பாவித்தனமே வடிவானவன்! உன் நடிப்புத் திறமைக்கு உனக்கு ஆஸ்கார் அவார்டை சிபாரிசு செய்கிறேன்!” என்றால் கேலி, கிண்டலில் உதடு சுழிய.
“அன்பே! எனக்கு உன் மேல் கோபமே வரவில்லை. என்னதான் பிழை செய்தேன் என்று தயை கூர்ந்து சொல்!”
“உன்னை ஒரு சக்கரவர்த்தியாய் பாவித்துக்கொண்டு என்னை உன் சாம்ராஜ்யத்தில் ஒரு அடிமை மாதிரி நீ நடத்தவில்லையா? என் நடமாட்டத்திற்கு ஏன் எல்லைக்கோடுகளை வரைகிறாய்? ராமாயணத்தில் லட்சுமணன் தனக்கு போட்ட கோட்டை சீதை கூட மதிக்கவில்லை என்று உனக்கு தெரியாதா?’
“அதனால் அவளுக்கு பெருந்துன்பம் நேர்ந்தது”, வார்த்தைகள் சட்டென்று அவன் வாயிலிருந்து வந்து விட்டன.
“வாயை மூடு! போதும் உன் அபத்தமான பேச்சு!”
“சரி, ஆகட்டும்! நான் லட்சுமணன் இல்லை”, என்றான் குழப்பம் தீராமலே.
“ஆஹா! நீ அவனை விட மோசம். என் சிறைக்காவலன் நீ. என்னை உன் கைதி போல் நடத்துகிறாய். என்னை சிறைக்குள் அடைத்து வைத்திருக்க விரும்புகிறாய்!”
“உன் மனசாட்சியிடம் கேள்! அது நான் உன்னை என் ஆத்மநாயகியாய் நேசிப்பதை சொல்லும்.”
“ஆத்மநாயகி! பூ....” புறம் தள்ளினாள்.
“நம் இனிய காதலை, புனிதமான தேனிலவை மறந்தாய்?” பரிதாபமாய் கேட்டான்.
“ஆனால் தேனிலவு முடிந்து விட்டது நாம் பூமிக்கு திரும்பி நீ எஜமானனாய் நடக்கத்துவங்கியதுமே!” என்றாள்.
“நம்மை பார்த்து அத்தனை பேரும் பொறாமை பட்டார்கள். ஒருவருக்கொருவராய் பிறந்த ஜோடி நாம்,” என்றான் விடாப்பிடியாக.
“ஐயே! ஒருவருக்கொருவராய் பிறந்தவர்கள்! முட்டாள் மாதிரி நானும் ஒரு காலத்தில் அதை நம்பினேன். இப்போது இல்லை, சாமி! என்னை முளையில் கட்டி வைக்க நினைக்கும் உன் சர்வாதிகாரத்தனம் புரிந்தபிறகு அந்த நம்பிக்கை போய்விட்டது,” இரக்கமின்றி தொடர்ந்தாள்.
“உன் வழியில் குறுக்கே நின்றதாகவே எனக்கு நினைவில்லையே! உன் மேல் அன்பை பொழிந்து பரிசுகளை வாங்கி குவித்தேனே!”
“ஆமாம், கூண்டு கிளிக்கு பழங்களும் கோட்டைகளும் தருவது மாதிரி,” என்றாள் குரோதமாய்.
“உன்னிடம் எப்போதாவது அதிருப்தி அடைந்திருக்கிறேனா? என்றைக்காவது கோபப்பட்டிருக்கிறேனா?” விடாது வாதாடினான்.
“அதெல்லாம் நான் உன் கண்பார்வையிலும், காத்து கேட்கும் தூரத்திலும் இருக்கும் வரை. நான் உன் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்!” என்று சாடினாள்.
“நான் உன் மேல் கொண்ட அதீத அக்கரையை அவநம்பிக்கை என்றா அர்த்தம் கொள்கிறாய்?” என்றான் அதிர்ந்து போய்.
“என்னது? என் மேல் அதீத அக்கரையா? கேட்க அழகாயிருக்கிறது, அன்பரே! நான் ஒன்றும் ஆபத்தில் சிக்கிய அபலையும் அல்ல நீரும் காபாற்ற வந்த வீரரும் அல்ல! என்ன உளறல்!” என்று எள்ளி நகையாடினாள்.
“நான் சொல்வதை ஏன் நம்ப மறுக்கிறாய்?’” என்றான் நொந்த குரலில்.
“ஏனா? என் பார்வையில் கடிவாளத்தை விட்டுவிட விரும்பாத எதேச்சாதிகாரி நீ!”
“பயமுறுத்தியபடி நீ என்னை விட்டு போய் விட மாட்டாயே?” என்றான் அச்சத்துடன்.
“நான் உன்னை விட்டு போகப்போகிறேன்! என்னால் தனியாக பிழைக்க முடியாது என்று நினைக்கிறாயா?” தைரியமாய் தலையை நிமிர்த்திக் கேட்டாள்.
அவன் சுத்தமாய் குழம்பிப்போயிருந்தான். உண்மையாகவே அவள் பிரச்சினை என்னவென்று அவனுக்கு புரியவில்லை. விஷயம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு “நாம் சுத்தி வளைத்து பேசிக்கொண்டே இருக்கிறோமோ? என்று அச்சத்துடன் வினவினான்.
வலிய வரவழைத்துக்கொண்ட பொறுமையுடன் பதில் சொன்னாள்:”கேட்டுக்கொள்! இதுதான் என் முடிவு: என் சிறகை விரித்து நான் விரும்பிய இடத்திற்கு பறந்து செல்வேன். நான் எங்கே போகலாம் போகக்கூடாது என்ற உன் மொட்டை அதிகாரத்திற்கும் ஆணைகளுக்கும் கட்டுப்படாமல்!”
அவள் வார்த்தைகளின் தீர்க்கம் அதிர வைத்தது. அவள் பேச்சில் உறுதியும், அவசரமும் இருந்தது.
கொஞ்சமும் நம்பாதவனாய் “நாம் இருவரும் சேர்ந்து செய்து கொண்ட திருமண ஒப்பந்தத்தை உடைக்கப்போகிறேன் என்று உண்மையாகவே  சொல்கிறாயா?” என்று கேட்டான்.
“உடைப்பில் தூக்கி போடுங்கள் ஒப்பந்தத்தை! சாகும் வரை சேர்ந்திருப்போம் என்ற ஒப்பந்தம்! ஹூம்! நாம் பிரியாமல் சேர்ந்திருந்தால் செத்து போவோம், சத்தியமாய் சொல்கிறேன்!”
தன காதுகளை நம்ப முடியாதவனாய் “என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறாயா?” என்றான்.
“ஆம், புரிந்துதான் பேசுகிறேன். உன் அநியாயமான காட்டுப்பாடுகள் என்னை மூச்சு திணற வைக்கின்றன. அமுக்குகின்ற அடிமைத்தனம் உறங்காத இரவுகளையும் தற்கொலை எண்ணங்களையும் தருகிறது!”
இன்னமும் இருளில் தடுமாறியபடியே “இந்த நெருப்பை பற்ற வைத்த பொறி எது என்று நீ சொல்லவேயில்லை!” என்றான்.
“ஆ! அப்படிக் கேள்! நான் நடமாடக்கூடிய இடத்தை நீ ஏன் வரையறுக்கிறாய்? ஏன்? ஏன்? நான் விரும்பிய இடத்திற்கு என்னை சுதந்திரமாக போக விட ஏன் மறுக்கிறாய்? ‘அந்த அறைக்குப் போகாதே!’ ‘அந்த கூடத்திற்கு போகாதே’ ‘அந்தக் கடைக்கு போகாதே’ ‘அந்த மூலைக்குப் போகாதே’ போன்ற உன் உத்தரவுகளை நான் வெறுக்கிறேன். நான் செல்லுமிடங்களை ஏன் கண்காணிக்கிறாய்?” கூண்டில் அடைபட்ட பறவையின் வேதனை அவளிடம். அவள் அனுபவித்த சிறைச்சாலை நிலைமை.
இறுதியில் பொறுமையிழந்து கதறினான் அவன், “ஐயோ! என் கண்மணியே! மனிதகுலம் நம் மேல் தொடுக்கும் இடைவிடாத போரினால் நான் எவ்வளவு பயந்து போயிருக்கிறேன் தெரியுமா? அவர்கள் எரிக்கும் புகை, வத்தி சுருள்கள், அவர்கள் வைத்திருக்கும் மின்சார, மின்னணு பொறிகள் இவற்றில் நீ மரண மூர்ச்சை அடைந்து விடுவாயோ என்று நான் பயந்து போயிருக்கிறேன்! நமக்கு மரண அடி தருவதற்கு அவர்கள் மின்சாரத்தால் சக்தியூட்டப்பட்ட உயிரை கொல்லும் மட்டைகளை ஆயுதமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் போர் தந்திரங்கள் அச்சுறுத்தும் வேகத்தில் மேம்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய கொலை நோக்கத்தையும், தந்திரமான பொறிகளையும் பற்றி என்னால் எப்படி பயப்படாமல் இருக்க முடியும்? அதிக ஆபத்து உள்ள இடங்களை இடைவிடாமல் நோட்டமிட்டு கண்காணித்து உன்னை எச்சரிக்க விரைகிறேன்! பிரிய சகியே! என் நோக்கத்தை ஏன் புரிந்து கொள்ள தவறினாய்? என் இருதயம் உனக்காக துடிக்கிறது, உனக்காக மட்டும்! எனக்கு உன் மேல் இருக்கும் ஆழ்ந்த கரிசனத்தை ஏன் அறியாதிருந்தாய்? இவ்வளவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு எவ்வளவு வேதனையாய் இருக்கிறது தெரியுமா? இன்னும் வெளிப்படையாய் உனக்கு விளக்காத முட்டாளாய் இருந்துவிட்டேனே! என் அன்பே, என்னை மன்னிப்பாயா?”
“கடவுளே! என் கணவரின் அளவில்லாத அன்பை புரிந்து கொள்ளாத மூடமாய் இருந்துவிட்டேனே! உங்கள் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளாததற்கு என்னை மன்னித்துவிடுங்கள், பிரபோ! மூச்சடைக்கும் உங்கள் அணைப்பில் கட்டுண்டு கிடக்க என்ன பாக்கியம் செய்தேன்!” என்று நாணத்துடன் முனகினாள்.


IndiBlogger - The Indian Blogger Community