Thursday, December 22, 2016

சுபம்

IndiBlogger - The Indian Blogger Community "முடிவா என்ன சொல்றான் உன் செல்ல மகன்?”
“உங்கள மாதிரியே பிடிவாதம் பிடிக்கிறான் உங்க அருமை மகன்.”
“அவ குலம், கோத்திரம் என்னன்னு தெரியுமா அவனுக்கு?”
“அவனோட குலம், கோத்திரம் என்னன்னே அவனுக்கு நினைவிருக்கான்னு தெரியல.”
“கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிருடி!”
“எனக்கு தெரியுங்க. நானும் எங்கண்ணா,உங்க தம்பிங்க இவங்களயல்லாம் கூப்பிட்டு அவன உக்கார வச்சி பேசி சரிக்கட்டலாம்னு நினைச்சேங்க. ஆனா, எனக்கு இப்ப அவன் எதுக்கும் அசஞ்சி குடுப்பான்னு தோணல.”
“என்னமோ, அந்த ப்ரியாவ அவன் அடிக்கடி நம்ம வீட்டுக்கு கூட்டி வந்தது எனக்கு முதல்லேர்ந்தே பிடிக்கல.”
“இந்த மட்டுக்கும் ரகசியமா அவன் நடந்துக்கலியேன்னு நினைங்க.”
“அதுக்காக வேத்து ஜாதிப்பொண்ண மருமகளாக்கிக்கிட சொல்றியா?”
“உங்க சிநேகிதர் மூர்த்தி மகன மாதிரி, துளசி மாடம் கதைல வர்ற மாதிரி ஒரு ஜெர்மன்காரிய கட்டிக்காம, என் சிநேகிதி சாந்தியோட மகன மாதிரி குஜராத்தி பொண்ண கட்டிக்காம தமிழ் பேசுற பொண்ணா இருக்காளேன்னு நினைக்கத் தோணுது.”
“ரொம்ப தாராள மனசுக்காரியா ஆகிட்ட போல!”
“காலம் மாறிகிட்டே இருக்கு. முழுக்க கோஎஜுகேஷன்ல படிக்கிறாங்க. ஆணும் பொண்ணுமா ஒன்னா ஆபீஸ் வேல பாக்குறாங்க.”
“அப்ப பெத்தவங்கள மதிக்காம தானா துணைய தேடிக்கலாமா?”
“இந்த இன்டர்நெட் காலத்துல அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சர்வசாதாரணமா ஆபீஸ் வேலையா போற நிலைமைல நாமளும் கொஞ்சம் மாறத்தான் செய்யணும்.”
“நம்ம வீட்டு சம்பிரதாயங்கள் எல்லாம் விடாம கடைபிடிக்கிற நீயா இப்படி பேசுற?”
“பாட்டி காலத்துல மாதிரி விறகு அடுப்புலயா சமைக்கிறேன்? கேஸும் மைக்ரோவேவும் வந்தாச்சு. தாத்தா காலத்துல மாதிரி கட்டைவண்டிலயா பிரயாணம் பண்றோம்? வசதி, வாய்ப்புகள் நம்ம வாழ்க்கைமுறையையே புரட்டிப்போடலியா?”
“அதுக்காக அப்பன் சொல்ல மதிக்கக்கூடாதா?’
“கூட்டுக்குடும்பமா வாழ்ந்த காலத்துல மேற்படிப்பு, உத்தியோகம், வெளியூர்ல ஹாஸ்டல் வாசம்னு பொம்பளப்புள்ளங்களுக்கு கிடைக்காத விசயமெல்லாம் இப்ப சர்வசாதரணமாயிருச்சே! ஆணும் பொண்ணும் சுதந்திரமா வாழ்றது மாதிரி சுதந்திரமா சிந்திக்கவும், முடிவெடுக்கவும் ஆரம்பிச்சாச்சு. இப்ப உங்க வறட்டு பிடிவாதம் சரிப்பட்டு வருமா?”
“பிரமாதமா வாதம் பண்றியே! உங்கப்பா உன்ன வக்கீலுக்கு படிக்க வச்சிருக்கலாம்!”
“என்ன கிண்டல் பண்றத விட்டுட்டு உருப்படியா ஏதாவது யோசிங்க.”
“நிஜமாவே இந்த ப்ரியாவ நம்ம வீட்டு மருமகளா ஏத்துக்கலாம்னு சொல்றியா?”
“’உங்க காப்பிக்கு நான் அடிமையிட்டேன்’னு அந்த பொண்ணு அடிக்கடி அடுப்படி வரை வந்து சொல்லும்போது அவளப்பத்தி நல்லவிதமா நினைக்கத் தோணுது.”
“ஆஹா! உனக்கு யாராவது லேசா ஐஸ் வச்சா போதுமே, அவங்களுக்கு அடிமையா ஆயிருவியே!”
“இது ஐஸ் இல்லிங்க. இந்த மாதிரி வெகுளியா, வெளிப்படையா பேசுற பெண்கள இந்த காலத்துல பாக்குறது அபூர்வம். மகன் வேற பிடிவாதமா இருக்கான்...வந்துட்டான்..வந்துட்டான்..நீங்களே பேசுங்க.”
“என்னப்பா ரவி, நல்லா யோசிச்சிப் பாத்தியா? பெத்தவங்க நாங்க பொருத்தமா பொண்ணு பாத்து செஞ்சி வக்கிறதுதான் நல்லது.”
“ஏம்ப்பா திருப்பி திருப்பி அதையே சொல்றீங்க?”
“என் வயசுக்கும் அனுபவத்துக்கும் மதிப்பு குடுக்கவே கூடாதுன்னு நினைக்கிறியா? இல்ல, உனக்கு எது நல்லதுன்னு முடிவெடுக்கிற உரிமை எங்களுக்கு கிடையாதுன்னு சொல்றியா?”
“கூல்! டாடி! ஏன் இப்படி அனாவசியமா உணர்ச்சிவசப்படுறீங்க?”
“இல்லப்பா, ப்ரியா கண்ணுக்கழகா லட்சணமா இருக்கான்னு உனக்கு பிடிச்சிருக்கலாம். கல்யாணத்துக்கு அது மட்டும் போதாதுப்பா.”
“நாங்க ரெண்டு பேரும் கவர்ச்சி காதல் இதெல்லாம் என்னன்னு தெரியாத டீன் ஏஜ் பிள்ளைங்க இல்லப்பா. ரொம்ப நாளா பேசி பழகி ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிகிட்டு எங்களால அனுசரிச்சி குடும்பம் நடத்த முடியும்னு தோணுறதால எடுத்த முடிவுப்பா.”
“அப்படித்தான் தாலி கூட கட்டிக்காம குடும்பம் நடத்திட்டு கொஞ்ச நாள்ல சரிப்பட்டு வராம பிரியிற கூத்தெல்லாம் பாத்துக்கிட்டுதான் இருக்கோம்.”
“நாங்க அந்த ரகம் இல்லப்பா. தாலிங்கற வேலியோட தாம்பத்திய தர்மம் தவறாம கண்ணியமா குடும்பம் நடத்தத்தான் ஆசைப்படுறோம். எத்தனை கருத்து வேறுபாடு வந்தாலும் கடமை தவறாம வாழ்ந்து காட்டுவோம்.”
“கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு.”
“பாக்குறதுக்கும் நல்லாத்தான் இருக்கும். இன்னும் ரெண்டு மாசத்துல என்ன அமெரிக்காவுக்கு 3 வருஷ கான்ட்ராக்ட்ல அனுப்பப்போறாங்க எங்க ஆபீஸ்லேர்ந்து. நான் சின்னப்பையனா இருக்கும் போது உங்க கல்யாண போட்டோல இல்லையேன்னு வருந்தியிருக்கேன். வயசான காலத்துல என் கல்யாண போட்டோல நீங்க இல்லையேன்னு நீங்க வருந்தக்கூடாதுப்பா. எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சி. நல்ல முடிவ எடுங்கப்பா.”
“ஆண்டவா! இதுதான் உன் சித்தம்னா நான் என்ன செய்ய முடியும்? சரி கிளம்புடி!”
“எங்க?”
“எல்லாம் அந்த ப்ரியா வீட்டுக்குத்தான். அவ அப்பா அம்மாகிட்ட பேசிட்டு அடுத்து ஆக வேண்டியதை பாக்கத்தான்!”
           *            *             *            *             *                  *
“என்னம்மா செல்லம்! திடுக்குனு முழிச்சியே! பையன் வயித்துக்குள்ள உதைக்குறானா?”
“ஏங்க, விடிகாலை கனவு பலிச்சிருமா?”

சிறகுகள்

IndiBlogger - The Indian Blogger Community அச்சம் மறந்தது
ஓர் சிறகு பிறந்தது
நாணம் தொலைந்தது
இன்னொரு சிறகு முளைத்தது
நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
அடுத்தடுத்து வந்தது
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவானது கற்பு
காதலன் தோளோடு நின்று
வாழும் கலை பயின்று
பேறனைத்தும் பெற்று
சொர்க்க பூமியிதில்
சின்னஞ் சிறு கிளியே
சிறகுகள் பெற்றாய்
வானம் உன் வசம்

IndiBlogger - The Indian Blogger Community