ஆணுக்கு முன் வர அஞ்சி
தூணுக்கு பின் ஒரு வஞ்சி
வீணுக்கு வீம்பிலே விஞ்சி
நாணும் சிகப்பை மிஞ்சி
பேணும் மஞ்சள் கொஞ்சி
எல்லாமே கபட நாடகம்
சொல்லாத சுகத்தின் பாடம்
தள்ளி நின்று தவிக்கவிட்டு
அள்ளிக் கொள்ள ஆசை வர
அமைதியாய் ஆழம் பார்த்து
ஆழத்திலே அமிழ்த்தும் கள்ளம்
அணை உடைக்கும் வெள்ளம்
பாயக் காத்திருக்கும் பள்ளம்
ஆழம் காணா ஆழி உள்ளம்
ஆளத் தெரிந்தவன் சூரன்
மீள முடியாத ஓர் வீரன்
எழுதாத காதல் காவியம்
முடியாத போக பாக்கியம்
விலகி விலகி சேர்வதும்
அலை கரை தொடுவதும்
தீராத ஓர் விளையாட்டு
உயிர் பாடும் பாட்டு
உலக லயமே மெட்டு
உய்யுது புதுப்பிக்கப்பட்டு
மாறுகின்ற பாணியிலும்
வற்றிடாத கேணியது
அவசரமாய் ஓடும் போதும்
அவசியமாய் உணருவது
நழுவுகின்ற நாட்களிலும்
நயமாய் தழுவாது தீராது
உரத்து பேசும் ஒலிக்குள்ளே
ஒளிந்து கிடக்கும் உள்ளொளி
ஒழிந்து விடாத மரபு அது
ஒளிக்காத உள்ளத்திலே
ஒழியாத உயிர் ஈர்ப்பு
போட்டி போடும் போக்கிலும்
எட்டிப் போகாத ஓர் குணம்
தட்டிக் கேட்கும் போர்க் குரல்
கட்டிப் போடும் கசிந்த மனம்
கட்சி வேறாய் வேடம் கட்டி
கடைசியிலே சரணாகதி
கோலங்கள் மாறலாம்
காலங்கள் மாறாது
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment