சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
கோடை மழை வந்தது
கொட்டி முடித்து சென்றது
கனம் குறைந்து போனதில்
வானம் தெளிவானது
குளித்துவிட்ட களிப்பில்
குளிர்ந்து விட்டது பூமி
இறுக்கம் தளர்ந்த காற்று
இளைப்பாறிக் கொண்டது
பிரளயம் பார்த்த பிரமிப்பில்
சிறகை உதறியது குருவி
புழு பூச்சி தேடி
புறப்பட்டுச் சென்றது
சேறாக ஆறாக
பெருகி வந்த மழை நீர்
பாதையோரம் படுத்திருந்த
பழுத்த இலையை
பச்சை இலையை
சம்மதம் கேளாமல்
சுமந்து சென்று
சேர்த்தது வேறிடம்
பத்திரமாய் பதிந்திருந்த
சின்னப் புல்லோ
மெல்ல நிமிர்ந்து
பெருமூச்சு விட்டது
பிழைத்துக் கொண்டேனென்று
தெருவோடு போகிற
ஒரு பசுமாடதன்
நுனி மேய்ந்து பசியாற
பெரிய வலியோடு
புரிந்து கொண்டது
கண்ணிகளை கோர்த்தவனின்
சாமர்த்திய கணக்கினை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment