கயல் போல் கண்களில் கடலின் ஆழம்
கணை போல் கண்களில் மின்னலின் வேகம்
செய்தித்தொடர்பு யுகத்திற்கொரு கணணியெனின்
அதனினும் கடிதாய் கணக்கற்ற கட்டளை
கணத்தினில் முடிப்பவை கண்களன்றோ!
தானியங்கி தகவல் மையமன்றோ!
உள்வாங்கும் செய்திகள் எத்தனை?
வெளியிடும் விசயங்கள் எத்தனை?
கனிந்து நோக்கி கனலை தணித்திடும்
கடிந்து விழித்திடின் கயமை பொடிபடும்
கலங்கி கசிந்திடின் கல்லும் கரைந்திடும்
நேராய் நோக்கிடின் நலங்கள் நடந்திடும்
இவையும் செய்யும் இன்னமும் செய்யும்.
முகத்தின் ஒளியாம் கண்கள் போன்றே
வீட்டின் விளக்காம் பெண்கள் அன்றோ!
கண்கள் செய்யும் காரியம் யாவும்
பெண்கள் செய்திட கூடுமாகும்.
கண்களை இமைகள் காப்பதினால்
பார்வை பெற்றோம் பாதை கண்டோம்
பெண்களை உலகம் போற்றி வந்தால்
வீடு விளங்கும் குலம் தழைக்கும்
நங்கையர் நலம் நாட்டின் பலம்-
சிறு தூசும் கண்களை உறுத்தலாகாது
ஒரு தீங்கும் பெண்களை அண்டலாகாது
மலர்ந்து விரியட்டும் கண்கள்
மகிழ்ந்து மணக்கட்டும் பெண்கள்.
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment