கட்டுண்டோம் உயிர்க் காதலிலே
கடந்து நின்றோம் காலத்தையே!
முந்நூத்தி அறுபத்தைந்து நாட்களிலே
முக்கியமாய் ஒரு நாள் ஆகிடுமோ?
நினைத்தா நான் தும்முகிறேன்?
யோசித்தா நான் சுவாசிக்கிறேன்?
தெளிவாய் தெரிந்த உண்மைக்கு
தேவைதானோ பிரகடனங்கள்?
உடலோடு ஒட்டி உறவாடும் ஆடையை
உதறி எறிந்து வேறொன்றை அணியலாம்
உடலின் ஆடையாய் ஆன தோலே
உனை நான் உதறுவதெங்ஙனம்?
உணர்வின் களமே! ஒன்றிய உறவே!
பிரித்துன்னை பார்ப்பதெங்கே?
கண்ணாடியும் பிம்பமும் ஆனோமே!
நிழலிழந்து போன நிசமிதுவே!
கடலோடு நதி கலந்த பின்னே
உப்பாகிப் போவதும் கூட
உவப்பான சங்கமம்தானே?
இரவறியோம், பகலறியோம்
இது போல வேறறியோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகுமே
புது கூட்டலிது கூடலிலே
இன்றோடு முடிந்திடுமோ
ஆதி அந்தமில்லா இவ்வுறவு?
கரை தெரியா கால நதியில்
களிப்புடன் நீந்துமிரு மீன்கள்
கணக்கில்லாப் பிறவிக் கணங்கள்
துளிப்போல தனியொரு நாளிங்கே
துச்சமாய் தோன்றுவதுண்மை!
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment