Saturday, March 20, 2010

வண்ணக்கோலங்கள் பொம்மை

தானே முளைக்கும் வானவில்கள்
வண்ண வண்ண கோலங்கள்
யாரும் வரையா ஓவியங்கள்
வடிக்க முடியா காவியங்கள்
சிந்தை மயங்கிய விருந்துகள்
சிதறி விழும் ரத்தினங்கள்
எண்ண இயலா வடிவங்கள்
நொடிக்கு நொடி புதுமைகள்
நெஞ்சை அள்ளும் நேர்த்திகள்
திரும்ப வராத சித்திரங்கள்
வியந்து மாளா விசித்திரங்கள்
சொக்க வைக்கும் கணங்கள்
குழந்தை போல குதூகலங்கள்
குதிபோடும் இன்ப மனங்கள்
மண்ணைத் தின்ன மாயவன்
வாய்க்குள் ஈரேழுலோகங்கள்
மூன்று பட்டை கண்ணாடிகள்
உடைந்த பாசிமணி துண்டுகள்
அடைத்த கையடக்க பொம்மை
ஒத்தைக் கண் வழியே விரியுது
கருத்தைக் கவரும் மாயாலோகம்
கீழே வைக்க மனமில்லை
நேரம் போவது தெரியவில்லை
இன்பம் இதுபோல் வேறில்லை
எட்டுமோ அதிசயத்தின் எல்லை
போற்றிடு கண்ணாடிச் சில்லை
உடைந்த சிறு வண்ணக்கல்லை
ஆக்கியவன் எந்த வித்தகன்
பாக்கியவான் எனை ஆக்கினன்
சொக்கிப்போக வைத்தனன்
சோர்விலா விழி விருந்திலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community