வாய்ச்சொல் தேவையில்லை
வார்த்தையில் சாரமில்லை
வாதத்தில் புரிவதில்லை
வேதத்தில் விளக்கவில்லை
மோனத்தில் மூழ்கிடு
“நான் யார்?” என்றிடு
மனதை மூடிவை
நினைவை நிறுத்திடு
நிச்சலனம் பழகிடு
நித்தியத்தில் கலந்திடு-
உலகின் தொடர்பறுத்து
தனியே தன்னந்தனியே
சுயம் காண விழைந்து
சுற்றம் மறந்து
சொந்தம் துறந்து
புறத்தை தொலைத்து
ஞானம் அடைந்து
விளைந்ததென்ன?
விளங்கியதென்ன?
விளக்கியதென்ன?
உலகில் கலந்து
உயிர்களை நேசித்து
உணர்வுடன் விரைந்து
வலிகள் களைந்து
துயர்கள் துடைத்து
ஓயாது உழைத்து
மனதை திறந்து
நினைவை நிறைத்து
அறிவை வளர்த்து
மகிழ்வாய் சிரித்து
வாழ்வது தவமா?
பிறவியின் பயனை
அடைவது நிசமா?
கடமைகள் தருவது
கைமேல் பலனா?
“நான்” உள்ளேயா?
நாடிக் கொண்டாடும்
பரந்த மானிடத்திலா?
“நான்” மட்டும் உய்வதா?
“நாம்” என்பதின்பமா?
சுயமா? பொதுவா? நலமெது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment