புதுநெல்லாய் ஒரு வீட்டில் முளைவிட்டு
புதுநாத்தாய் மறுவீட்டில் வேர்பிடித்து
தன்னிகரில்லா தமிழ்மண்ணின் சீதனமாய்
குலமகளாய் குத்துவிளக்காய் துலங்கிடவும்
என்னால் முடியும்.
தோளோடு தோள் நின்று துணைவருடன்
வீணாக மோதாமல் நெறி தவறிப் போகாமல்
கொண்ட காதல் மாறாமல் இல்லறத்தை
இருமாடிழுக்கும் வண்டியாய் கண்டிடவும்
என்னால் முடியும்.
பாலோடு சோறோடு பல கதைகள் பிசைந்து
பருப்போடு நெய்யோடு நீதி நெறிகள் கலந்து
வயிறார உண்ண ஊட்டுவேன் என் குழவிக்கு
வருங்கால பயிரினை வளமாக வளர்த்திடவும்
என்னால் முடியும்.
பருவத்து காய்கனியை பாங்காக வாங்கிவந்து
பக்குவமாய் மிதமான உப்பு உரைப்போடு
சுவையாய் சத்தாய் கேடின்றி சமைத்திடவும்
நோயற்ற வாழ்வெனும் செல்வத்தை நல்கிடவும்
என்னால் முடியும்.
ஒருபிடி அரிசி அனுதினம் ஒதுக்கி வைத்து
ஒரு ரூபாய் காசை அடிக்கடி பதுக்கி வைத்து
கழித்த உடுப்புகளை பத்திரமாய் சேகரித்து
ஆங்கோர் ஏழையின் துயர் துடைத்திடவும்
என்னால் முடியும்.
அதீத ஆசை ஒழித்து தகாத இச்சை அழித்து
தகுதிக்கு மீறாது திட்டமிட்டு தாராளமாய்
வேண்டுவன கண்டு வேண்டாதவை இன்றி
மனமகிழ்வுடனே மனையாட்சி புரிந்திடவும்
என்னால் முடியும்.
அழகெது பாசமெது பண்பெது நீசமெது
பொருந்தாத பழக்கமெது வாழும் வகையெது
வக்கணையாய் நானுரைப்பேன் நயமாகவே
வடிவாக அதுபோல வாழ்ந்தும் காட்டிடவும்
என்னால் முடியும்.
தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் தாயகம்
தரணியெங்கும் நாட வேண்டும் நம் வழி
அனைவரும் பேச வேண்டும் ஒரு மொழி
அன்பென்ற அந்த மொழி கற்றுத்தந்திடவும்
என்னால் முடியும்.
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment