Wednesday, March 17, 2010

பாதியிலே

வெங்காயம் வெட்டி வைத்து
மிளகாயை கீறி வைத்து
தக்காளி அரிந்து வைத்து
இஞ்சி பூண்டு சேர்த்தரைத்து
சோம்பு கிராம்பு எடுத்து வைத்து
வாணலியை அடுப்பில் வைத்து
எண்ணெய் காய்கின்ற போது
வாசனைக்கு நாசி காத்திருக்க
நாவில் நீர் ஊற ஆரம்பிக்க
வயிறும் நிமிண்ட துவங்கும் போது
அப்படியே போட்டுவிட்டு
போய் படுக்கச் சொல்லியே
பாழும் தலைசுற்றல் வந்ததே
வாந்தி மயக்கம் வாட்டுதே.

பாலூட்டி தாலாட்டி சீராட்டி
பூப்போல விரிந்த மொட்டை
பள்ளிக்கு சீருடையில் அனுப்பி
பெரிய படிப்பு படிக்க பாசமுடன்
கல்விச்சாலை அனுப்பி வைத்து-
கலக்கம் வந்து சூழுதே
மனம் மருண்டு துவளுதே
பக்குவமாய் சமைக்கும் முன்னே
ஆயத்தமனைத்தும் வியர்த்தமாகுமோ
விளைந்து தெளிந்து வினையாற்றுமோ
விழலுக்கிரைத்த நீராய் போகுமோ
வெள்ளாமை வீடு வந்து சேருமோ
வறட்சி வந்து கருகுமோ
வெள்ளம் வந்து மூழ்குமோ

சுமை தாங்கும் தோள்களை
வலுவேற்றும் வேளையிலே
களமிறங்கி சாதித்து வென்றிடவே
பயிற்சி பெறும் பருவத்திலே
சிற்றின்ப சக்திகள், இச்சை பிசாசுகள்
ஏவலாய், பில்லி சூனியமாய்
வந்திங்கு இறங்குதே
இடியாய் தகர்க்குதே
கட்டி வைத்த கோட்டைகள்
காணாமல் போகுதே
என்ன இது சோதனை?
ஏன் இந்த வேதனை?
புலவு தயாராகுமா?
புதிய தலைமுறை பிழைக்குமா?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community