லேசானது மனது
குளிந்த காலையில்
குயிலின் கூவலிலே
இதமான பகலிலே
மீண்டும் தேன் காதிலே
சிலிர்த்துப் போனேனே
ஏழாவது மாடி சாரத்தில்
ஏறி வேலை செய்பவன்
பிசிரின்றி பாடினான்
திடீரென தானாகவே
லயித்துப்பாடிய குரலில்
குழைவும் லயமும்
கூடவே பாவமும்
ஏன் பாடினான்
அலுப்பு மறக்கவா
அலுக்காத மறக்காத
உறவின் நினைவிலா
இசையின் ரசிகனாகவா
சில வரிகள் மட்டும்
பீரிட்டு வந்தனவோ
பின் நின்று போனதோ
ஏன் பாடினான்
பேருக்கும் புகழுக்கும்
பொருளுக்கும் இல்லை
நிச்சயமாய் இல்லை
மேடை முன்னமர்ந்து
ஆரவாரமாய் ரசிக்க
ஓர் கூட்டமுமில்லை
தானே ரசிகன்
தானே கலைஞன்
கூவும் குயில்
ஆடும் மயில்
சரஞ்சரமாய் மழை
நனைந்த மரங்கள்
சிரிக்கும் பூக்கள்
இனிக்கும் கனிகள்
எல்லாம் ஒரு ரகம்
அவனும் அந்த இனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment