பழைய கதையிது
பள்ளியிலே படித்தது
ஊரெங்கும் திருவிழா
ஒளிவெள்ளம் பாய்ந்திட
உற்சாகம் தவழ்ந்திட
பக்கத்து வீடுகளின்
பட்டாடை சிறுமிகள்
இருவரும் இன்பமாக
வாசலில் சேற்றிலே
சிற்றோடை கட்டி
சேர்ந்து களிக்கையிலே
ஒருத்தி வீசியடித்த
சேற்று நீரதுமே
மற்றவள் பட்டாடையை
பாழாய் க்கியதே
“ஓ” என்றழுதனளே
அந்த ஓலம் கேட்டு
இருவிட்டாரும் ஓடி வந்து
நடந்த கதை அறிந்து
பெரும்போரை துவக்கி
கூச்சல் அதிகமானது
பகையங்கு பொங்கியது
கடுஞ்சொற்கள் ஓயாது
கணங்கள் மணிகள் ஆனது
சிறு இடைவெளியில்
சிறுமிகளை அவர் நோக்க
இணைந்து இருவருமே
மீண்டும் விளையாடுவதை
கண்ணுற்ற போதிலே
வெட்கம் வந்து இறங்கவே
விவேகம் அங்கு பிறந்தது
நரையில்லை நடுக்கமில்லை
பட்டறிவும் படிந்திருக்கவில்லை
படிப்பறிவும் ஏறியிருக்கவில்லை
முற்றாத குருத்துக்கள்
முகிழ்க்காத அரும்புகள்
குணத்திலே குன்றுகள்
அந்த நாள் கவிஞனும்
அழகாக பாடினான்
“குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும்
மனத்தால் ஒன்று”
பிள்ளைகளாய் இருக்கும்போது
வெள்ளையாய் மனமிருக்க
தெய்வம் அங்கு குடியிருந்து
கள்ளம் வளரும் வயதோடு
விலகிச் செல்லும் கூறாது
பொது நியதியிது மாறாது
காக்காக்கடி கடித்து பகிர்ந்து
அழுத கண்ணீர் ஓடித் துடைத்து
ஆறுதலாய் வார்த்தை சொல்லி
தகப்பன்சாமி போலவே
ஞானத்தோடு வாக்கிருக்க
அழகான பண்பெல்லாம்
அணிகலனாய் அணிந்திருக்க
அது ஒரு நிலாக்காலம்
கைக்கூப்பி வணங்கிட
மனமுவந்து மதித்திட
அடியொற்றி நடந்திட
வளர்ந்த வருடங்களா
சுமந்த பட்டங்களா
மணக்கும் இனிக்கும்
மனிதநேய பண்புகளா
ஐயமிதிலில்லை
தெளிவானது தீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment