யோசி
கட்டங்களை வட்டங்களைத் தாண்டி யோசி
மனித அடையாள கோட்டைத் தாண்டாமல் யோசி
புசி
ருசிக்கும் பசிக்கும் நிறைவாகப் புசி
நோயும் நோவும் நிறையாமல் புசி
வாசி
ரசித்தும் பகுத்தும் தேடி வாசி
கணநேர திருப்தி தேடாமல் வாசி
எழுது
உண்மையை உணர்வை ஒளிக்காமல் எழுது
கண்டனத்தை கண்ணியத்தில் ஒளித்து எழுது
தேடிடு
ஆக்கத்தை ஊக்கத்தை எங்கெங்கும் தேடிடு
அறிவை அமைதியை உன்னுள்ளே தேடிடு
வாதிடு
ஐயமும் அறிவீனமும் தொலைந்திட வாதிடு
நயமும் தெளிவும் தொலையாமல் வாதிடு
கூடிடு
நல்லதும் நட்பும் வளர்த்திட கூடிடு
வம்பும் வழக்கும் வளர்க்காமல் கூடிடு
விளையாடு
நட்சத்திர தூசி மேல் சறுக்கி விளையாடு
நிதானமும் கவனமும் சறுக்காமல் விளையாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment