சொல்லத்தான் வேண்டும் ஆராய்ச்சி இருகூர் கத்தியென்று
ஆர்வத்தில் பேரறிவில் கண்டுபிடிப்பு தரும் போதையில்
என்னென்னவோ கண்டு பிடித்தார் அவரே பின் நொந்தார்
வெடியை கொடுத்து வினையை உருவாக்கியவர் பெயரில்
பரிசு ஒரு பரிகாரந்தானோ மனதசாட்சியின் உறுத்தலோ
அணுவை பிளந்தவரறிவாரோ பேரழிவு ஆயுதங்கள் வருமென
பிணி தீர்க்கத்தான் என்று இன்னும் தொடருது பல ஆராய்ச்சி
பலாபலன்கள் பாதகமாய் இருக்க நிறையவே சாத்தியக்கூறு
ஏன் எதற்கு எப்படி என்று கேட்கச் சொன்னவனுக்கு விஷம்
பகுத்தறிவை தூண்டியதால் மடமை இருள் அகல விடிந்தது
விவகாரமான சமூக பழக்கங்கள் போட்ட கொட்டம் முடிந்தது
மாட்டுத்தொழுவினில் கட்டும் பிராணியல்ல பெண்ணென்றான்
மேய அனுப்பிவிட்டானா புரிந்துகொள்ளாமல் போனாரே
ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்
நடையிலே உடையிலே நாகரிக போக்கிலே
சரி நிகர் சமானமாய் சேர்ந்து பாடம் படிக்கிறாள்
ஒன்றாய் அமர்ந்து அலுவலகத்தில் பணி புரிகிறாள்
ஊரடங்கிய பின்னும் உழைக்க அனுமதி உண்டின்று
புகை ஊத பழகிவிட்டாள் மது அருந்த தயக்கமில்லை
தோளில் கைபோட்டு தோழமை கொண்டாடுகிறாள்
இடுப்பை அணைத்தால் இம்சையாய் இல்லை
இழுத்த இழுப்பிற்கு மறுக்காமல் இசைகிறாள்
கண் போன போக்கில் மனம் போவதும் தடம் பிறழ்வதும்
ஆணின் தனி உரிமையென்று யார் சட்டம் போட்டது
வானமே இவள் எல்லை போடும் தடைகள் பொடிபடுமே
குடும்பத்தளை அறுத்தவள் தனிக்காட்டு ராணியிவள்
ஒப்பற்ற ஒளியாய் உதித்தவள் நால்வகை சேனையொடு
கோலோச்சப் பிறந்தவள் கருப்பையை பணயம் வைத்தாள்
பொய்மானை விரட்டும் பந்தயத்தில் பித்தாய் ஓடுகிறாள்
பூவுலகை காரிருள் கருநாகம் கவ்விட காத்திருக்குதே
கிரகணங்கள் விலகாது போகாது என்பதே ஆறுதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment