Wednesday, March 17, 2010

நிவாரணம்

இப்படியொரு இடி விழும் என்று இருவரும் எதிர்பார்க்கவேயில்லை. இரவு முழுக்க உறங்காமலே மன உளைச்சல்பட்டு பலிலும் தொடர்ந்தது நரகம். மீண்டும் மீண்டும் அதே வேதனைச் சுழலில் அமிழ்ந்து வெந்தனர்.

குலுங்கி குலுங்கி அழுதவளை தேற்ற வழி தெரியாமல் கலங்கிய கண்களுடன் விட்டத்தை வெறித்தார் அவர்.

எல்லாமே சூன்யமாய் தோன்றியது திசை தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டது போல் திகைப்பாய் இருந்தது. உலகம் ஸ்தம்பித்துவிட்டது போல இருந்தது. சித்தம் கலங்கிவிட்டது போல ஒரு உக்கிரமான உணர்வு தோன்றியது. கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க சிறகை அடித்துப் போராடும் பறவையின் மரணாவஸ்தை. வயிற்றை பிசையும் வித்தியாசமான வேதனை.

"என்னங்க, நம்ம குழந்தை... நம்ம குழந்தை..." கண்ணீருக்கிடையில் பேச ஆரம்பித்தவளால் தொடர முடியவில்லை. மீண்டும் குலுங்கினாள்.

"ம்.. ம்... ம்..." அவள் தோளை ஆதரவாக தட்டியவராலும் வேறொன்றும் பேசமுடியவில்லை.

"முதல்லேர்ந்தே எனக்கு என்னவோ குறையா... என்னன்னே புரியாம.... முள்ளா உறுத்திச்சிங்க," ஒரு முடிவோடு சொல்லத் துவங்கினாள். "சாதாரண மாமியார் syndrome போலன்னு நினைச்சிட்டேங்க."

"ஏண்டி இன்னிக்கி நமக்கு வயசாகிட்டாலும் நம்ம வயசுகாலத்து ஞாபகமெல்லாம் மறந்தாபோகும்? கல்யாணமான புதுசுல நாம எப்படி இருந்தோம்?"

"ஆமாங்க, எனக்கும் ஒரே நெருடலா இருந்திச்சி, படிச்ச பசங்க, இந்தக்காலத்து நாகரிகம் போலன்னு நினைச்சேன். அந்தக்காலத்துலதான் வீட்டுல பெரியவங்க முன்னாடி கட்டுப்பாடு முக்கியமா இருந்திச்சி. நம்ம குழந்தைக சுதந்திரமா இருக்கும்படியாத்தானே நாம நடந்துக்கறோம்."

"மகன்கிட்ட இத எப்படிடி வாயத்திறந்து பேச முடியும்? குழந்த முகம் இருளோன்னு இருக்கிறத என்னால சகிச்சிக்க முடியாம உன்கிட்டயும் அனாவசியமா பீதியை கிளப்பாம ரகசியமா அழுதுகிட்டுருந்தேண்டி!"

"ரெண்டு பேரும் வேலைக்குப் போற அலுப்புன்னு நினைச்சேங்க. தாய் கண்ணுக்கு தப்பாத சீண்டல் ஒன்னுகூட இல்லேங்க! இப்படியுமா யந்திரமா இருக்கமுடியும்னு தோணுச்சுங்க."

"ஏதோ ஊடல், ஆரம்ப காலத்துல adjust பண்ணிக்கிற problem போலன்னு என்ன நானே சமாதானம் பண்ணிக்கப் பார்த்தேண்டி."

"தாயா தகப்பனா நம்ம உணர்வு எப்படிங்க தப்பா இருக்க முடியும்? புள்ள நடைபிணமா இருக்காப்புல தோணுனப்ப தலையிடாம எப்படிங்க இருக்க முடியும்?"

"நேத்து அவனுக்கு மட்டும் லீவுன்னு வீட்டுல இருந்தப்ப, கிடச்ச வாய்ப்ப நழுவவிடாம, நாசுக்கா ஆரம்பிச்சேன்."

"குழந்த பிடிகுடுக்கவே இல்லையே!"

"மாறி மாறி குடைஞ்சதுல இனி மறைச்சு பிரயோஜனமில்லேன்னு மனசு பாரத்த இறக்கி வச்சிட்டானேடி!"

"பள்ளியிலயும் காலேஜிலயும் எத்தனை மெடல்! எத்தனை பாராட்டு! எவ்வளவு பெரிய பதவி இந்த சின்ன வயசில! கடைசில சொந்த வாழ்க்கைல தோத்துட்டானே நம்ம தங்கம்!"

"நாம வளத்த குழந்த ஒழுக்கத்துலயும், மரியாதையிலயும் எப்பேர்ப்பட்ட ஜெம்! அவனுக்கு இப்படியொரு விதியா?"

" 'தொடாதே'ன்னு அந்த உத்தமனைப்போய் கிராதகி சொல்லுவாளோ?"

"பெண்டாட்டிய அன்னையா வணங்குற அவதார புருஷனையா மகனா பெத்துருக்கோம்?"

"காதல் கத்திரிக்காய்க்கு அவளோட தோப்பனார் மசியலேன்னதுக்கும், மிரட்டி நம்ம குழந்தைக்கு கட்டிவச்சதுக்கும் இப்படியா பழிவாங்குவா பாதகி?" அடி வயிற்றிலிருந்து சீறினாள்.

"இதெல்லாம் நமக்கு முன்னாடியே தெரியாம போச்சேடி! இன்னும் நல்லா விசாரிக்காம விட்டுட்டோமேடி!" தலையில் அடித்துக் கொண்டு அழுகையில் குலுங்கினார்.

"பழச மறக்காம எவனோ பழிகாரனோட போட்டோவ பர்ஸ்லேயே வச்சிகிட்டு அலையுற பாதகத்திக்கு புத்தி வரும்னு நம்ம குழந்த ஏங்க இலவு காக்கணும்?" பெத்த மனம் பொறுமியது.

"தோப்பனாரை மதிக்கல, புருஷனுக்கு அடங்கல, மாமன் மாமிய நினைக்கல, இவளுக்கு புத்தி சொல்றதும் கல்லுல நார் உரிக்கிறதும் ஒன்னுதான்!" ஆழமான வருத்தம் அவர் குரலில்.

"இவ்வளவு அழுத்தமா, அழிச்சாட்டியமா ஒரு பொண்குழந்த நடந்துக்க முடியும்னு என்னால நம்பவே முடியலீங்க! தாலிய கேலிக்கூத்தாக்கிட்டாளே!" ஆற்ற முடியாமல் அவள்.

"ஊரக்கூட்டி விமரிசையா கல்யாணம் பண்ணிவச்சதுக்கு பலன் இதுதானாடி?" சீறினார்.

"ஏங்க சந்தி சிரிக்கும்னு கூசத்தான் செய்யுது. அதுக்காக தப்பு செய்யாத நமக்கு, நம்ம குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா?" தீர்மானமாக கேட்டாள்.

"ஆமா. நானும் அதையேதான் நினைச்சேன். எது அசிங்கம், எது அகெளரவம், எது அநியாயம்னு ஒரு விவஸ்தையே இல்லாம கலி முத்திட்டிருக்கு. நம்ம குழந்தைக்கு நாம பூட்டின தளைய நாமதான் வெட்டிவிடணும்." முடிவு செய்துவிட்டார்.

"உள்ளுக்குள்ளேயே மருகி உருக்குலைஞ்சி போய்கிட்டிருக்கிற நம்ம குழந்தைக்கு இனியும் தாமதிக்காம நாம உதவி செய்யணுங்க." தாயுள்ளம் உருகியது

"நாம தெரியாம செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் இருக்கு. நம்ம அழகான, ஆனந்தமான குடும்பத்த ஆட்டி வைக்கிற இந்த விபத்துக்கு நிவாரணம் தேடுவோம்." தெளிவு பிறந்தது.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community