Tuesday, March 16, 2010

துணைவி

கரடுமுரடான பாதையிலே
கல்லுமுள்ளு தைக்கையிலே
கால் நோவை பொறுத்துகிட்டு
கை கோர்த்து நடந்தவளே

இளமை கால ஆசையிலே
காத்து இதமாய் வீசையிலே
மனம் லேசாகி போகையிலே
கானம் பாடி களிப்பூட்டியவளே

புயல் மழை நேரத்திலே
பொல்லாத குளிர் நடுக்கையிலே
கோழிக் குஞ்சாய் குறுகாமல்
கதகதப்பை தந்தவளே

திசை தெரியாமல் திகைக்கையிலே
திக்கறியாது நிற்கையிலே
கலங்கரையாய் னவளே
கலங்காது காத்தவளே

நாடி தளர்ந்த நாளிலும்
நொடி வந்து நோகையிலும்
நடுங்காமல் நிற்பாயே
நல்ல துணைவியானவளே

நிழல் போல நடந்தவளே
முன்னும் கூட வந்தவளே
பின்னும் உன் துணை வேணுமடி
பிறவி தாண்டிய உறவடி

காலக்கரையில் நாம் கைகோர்த்து
மாயக் கண்ணாடியில் முகம் பார்த்து
பிரிந்து சேரும் பிறவி விளையாட்டை
அலுக்காது ஆடுவதை அறிவதாரோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community