இருள் பிரியா இளங்காலையில்,
இமை திறவா இடை வேளையில்,
இசையாய் எழும் புள்ளின ஒலிகளை
இச்சையுடன் இரு செவிகள் ஏற்றிட,
இரவின் நீண்ட நிசப்தம் முடிகின்றது,
இதமான நல்ல துயில் கலைகின்றது;
இதுதான் உகந்த தருணமென்றே
இன்றைய பணிகளின் அட்டவணை
இலகுவாய் மனத்திரையில் ஓடுது;
இரும்பாய் கனக்கும் இதயங்களை
இலவம் பஞ்சாய் இலேசாக்கிடவே,
இளகிய பாகாய் மனம் இரங்கிடவே,
இயன்றவரை துயரகற்ற முயன்றிடவே,
இளைப்பாறும் இறுதி கணம் வரை
இதுவேயொரு தவமாய், தாகமாய்,
இடைவிடாத மந்திர உச்சரிப்பாய்
இயம்பும் உள்ளம் இறைஞ்சிய பின்,
“இவ்வளவு நாள் இருந்தது போலே
இன்றும் இசைவாய் இருந்திடு,
இன்னல்கள் யாவும் களைந்திடு,
இக்கட்டின் இடுக்கினில் மாட்டாமல்,
இடுக்கண்ணின் இடுக்கி கவ்வாமல்,
இடும்பையின் இடைஞ்சல் இல்லாமல்,
இன்னதென்றில்லா இம்சைகள் இன்றி,
இடர்பாடின்றி பயணம் தொடர்ந்திட,
இலட்சியக் கோட்டை இடிபடாதிருக்க,
இங்கே இருக்கின்ற நாளையெல்லாம்
இனிக்கின்ற நாளாய் ஆக்கிவிடு”- என்றே
இறைவனிடம் இரகசிய விண்ணப்பம்
இடுகின்ற போது சடுதியில் கனிந்திடும்
இயல்பை இன்றும் உணர்கின்றேன்;
இன்முகம் காட்டி, இன்சொல் கூறி,
இலக்கை நோக்கி செல்கையிலே,
இல்லை இங்கே தொல்லையே,
இன்னும் இலங்குது நற்பண்புகள்;
இயற்கையன்னை பேரன்பை, பேரழகை,
இயங்குகின்ற அளவில்லா நேர்த்தியை,
இயம்பவொண்ணா சீரான ஒழுங்கினை,
இட்டமுடன் துதித்து ராதித்தபடியே,
இணக்கமான சிந்தனைகள் தோன்ற,
இன்பமான எதிர்பார்ப்புகள் பிறக்க,
இட்ட கட்டளை உவந்து ஈடேற்றிட,
இணையில்லா இல்லம் இவ்வையத்துள்
இன்னொரு நாள் வாழ எழுகின்றேன்.
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment