ஆண்டாண்டு காலமாய்
ஆண்டு வந்த ஆடவனின்
ஆட்சி முடிந்ததே
கட்சி மாறியதே
கண்டனம் வலுத்தது
கொண்டவனை இழுத்தது
சட்டத்தின் இடுக்கியில்
கொட்டம் மாட்டியது
வெண்ணெய் எடுத்தது பாறை அவதாரம்
பெண்ணைக் கடைந்தவன் அறுக்கும் தன் வினை
மல்லுக்கு நிற்க வேண்டாம் மங்கையிடம்
சொல்லுக்குக் கூட கிள்ளுக்கீரை இங்கில்லை
கண்டிக்க துணிந்தது அரசாங்கம்
தண்டிக்க விதிகள் அமலாக்கம்
ரத்தத்தில் ஊறியது ஆணின் அதிகாரம்
சுத்திகரிக்க உதித்தது நல்ல நேரம்
பெண்ணுரிமை ஓங்கும் காலமிது
கண்ணெதிரே நிற்கும் நீதியின்று
செல்லாக்காசாகி செய்வான் சிறைவாசம்
பொல்லா இல்லற இலக்கணத்தின் நாசம்
தீண்டுமோ அவளை அவன் விரல் நுனி
மீண்டும் மலருமோ வாடிய பூ இனி
சுட்ட மண் தான் ஒட்டுமோ
சட்டத்தால் அது இயலுமோ
கண்ணை இமை காக்காமல்
புண்ணாய் உறுத்தும் தூசானால்
போற்றும் மணியை எறிவோமோ
மாற்று மருந்தை அறியோமோ
கண்ட வெற்றியிது இனிக்கும் கனிதானா
கண்டம் கடந்து விடுபட்டிட வழியிதுவா
உடலை விடுத்தால் உயிர் ஆகும் ஆவி
கடலை பிரியாத அலைதானே இயக்கம்
பண்புகள் புரண்டு படுத்தது
மண் கலம் உடைந்து போனது
மாயத் தூக்கமிதுவோ
ஓயாத ஏக்கந்தானோ
Sunday, March 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment