என்று வருமோ என் சாவு?
எப்படி நிகழுமோ இறப்பு?
ரொம்ப வலிக்குமோ நோவு?
விடுதலை தானே அந்த இறப்பு?
யாருக்கும் இனி தேவையில்லையே?
வந்த வேலை இன்னும் என்ன?
கடமைகள் தான் முடிந்தனவே?
ஓடியாட முடியலையே மூப்பிலே?
பயனுண்டோ இருப்பதிலே?
பொல்லாத வியாதி வந்து
படுக்கையிலே போட்டிடுமோ?
பேச்சுமூச்சின்றி கிடக்கணுமோ?
பெரும்பாரம் ஆகணுமோ?
தாமரை இலை தண்ணீராய்
எதிலும் ஒட்டாமல்
எப்பற்றும் இல்லாமல்
உலகின் போக்கு புரியாமல்
சிறியவர் செய்கை பிடிக்காமல்
உறக்கத்திற்கும் விழிப்புக்கும் நடுவே
செத்த மூதாதையரை சிந்திக்கவே
விரும்புதே பொல்லாத மனமுமே
கனவிலும் அவரே அழைக்கிறார்
நினைவிலும் நிழல் போல் தெரிகிறார்
கண்ணாமூச்சி ஆடும் காலனை
காண முடிகிறதாவென தவித்து
தனியான உலகத்திலே தானாய்
உலவுவது யாருக்கும் புரியலையே-
உலர்ந்த முதியோரின் தவிப்பை
தணிக்க வழியேதும் உள்ளதோ?
சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தையும்
செவிக்குள் புகுந்திடவில்லையே
தீவாகிப் போனவரை எட்டும்
பாலம் ஒன்று கட்டவும் இயலுமோ?
உடலும் மனமும் இளைத்து
இயலாத இவரை பாசமும்
தொடவில்லை பணியும்
இழுக்கவில்லை பயத்திலே
இருப்பவரை எண்ணத்தால்
தொடலாமோ தடவலாமோ
அமைதிக்கு ஒரு மருந்தாய்
ஆகுமோ இனிய சங்கீதம்?
எட்டாத தூரத்திற்கு சென்று
ஏக்கத்தின் விளிம்பில் நின்று
சாவுக்கு தவமிருப்போர்க்கு
பிரியமாய் அர்ப்பணிக்க
பரிவுடன் அனுப்பிவைக்க
சுற்றத்தின் சூட்சும நல்லெண்ணங்களே
அருமருந்தோ? மயிலிறகோ?
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment