Tuesday, March 16, 2010

தாம்பத்யம்

மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே
இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள்
இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள்
என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள்
ஒரே தடத்தில் இரு மனங்களின் மௌனப் பயணம்
“நீயே என் ஒரே தாரம்” என்கின்றான் அவன்
“நீங்கள்தான் என் ஒரே ஆதரவு” அவள் பதில்
நிறைய கற்பனைகள் நடுவே நீண்ட பெருமூச்சுகள்
சொல்லத் தெரியாத புதிரான எதிர்பார்ப்புகள்
இன்பமா துன்பமா இனங்காண முடியாத திகைப்பு
கலையாத தவமா கலைக்க விரும்பாத கனவா
மிச்சமின்றி துய்த்துவிட்ட பெருங்களைப்பா-
“நடு நிசி ஆகிவிட்டது தூங்கப்போகலாம்
பல்செட்டை கழற்றிவிட்டுப் படுக்க வாருங்கள்”

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community