சொற்கள்! சொற்கள்! சொற்கள்!
சொக்க வைக்கும் சொற்கள்!
குயவன் கை களிமண்ணாய்
குழைந்து வளையும் சொற்கள்!
உளியின் கல்வெட்டாய் பதியும்,
உருக்கிய பாகாய் கசியும்,
காலை ஒளியாய் வளரும்,
மாலை நிழலாய் நீழும்,
மோனத்தில் மனமிருக்கையில்
உற்சாக ஊற்றாய் சொற்கள்!
ஊறிய விதையென வெடிக்கும்
சூல்கொண்ட சொற்கள்!
கனவை வடிக்கும் சொற்கள்!
கட்டுக்கடங்கா சொற்கள்!
எண்ணத்தை எழுத்தில் வரைய
கை கொடுக்கும் சொற்கள்!
எண்ணற்ற வித்தைகள்,
என்னென்ன விந்தைகள்,
மயக்க வந்த மாயங்கள்,
வண்ண வண்ண சாயங்கள்,
வானவில்லின் சாயல்கள்,
மெல்லிய மயில் சிறகுகள்,
வலிய எ·கான வாட்கள்,
இடையில் ஒளிந்த ஊகங்கள்,
உயிரை தீண்டும் தீ நாக்குகள்,
மெய்யை நிறுவும் வாக்குகள்,
உயிரை மெய்யுடன் சேர்க்கும்
அறிவுப்பாலம் அவையன்றோ!
அ·தின்றி மொழியுண்டோ?
மொழியில் செழிப்புண்டோ?
செழிப்பில் செருக்குண்டோ?
செருக்கின் அணி பூண்டவர்
பூத்து காய்த்து கனிந்து
சீருடன் நடை போடலும்,
வகை தொகையுடன் வளர்தலும்
மரபாய் வளர்ந்த காலையில்
புதுமையும் புலர்ந்ததே,
மணம் வீசி மலர்ந்ததே-
சொற்கள் தந்த கிறக்கம் வளர்க!
கிறங்கி வளர்ந்த கிறுக்கும் வாழ்க!
ஞானக்கிறுக்கில் ஞாலம் தழைக்க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment