Wednesday, March 17, 2010

பெண்மை

ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் படைப்பிலே
சாதி இரண்டிருந்தாலும், சார்ந்த இந்த இரு இனத்திலே
சிறப்பென்று சீர்தூக்கி பார்க்கையிலே
வலிய கொம்பாய் வளர்ந்திருக்கும் ஆண்மை
மெலிய கொடியாய் படர்ந்திருக்கும் பெண்மை
பின்னதன் பெருமை பெரிதென்பதுண்மை-

மலர்ந்து மணந்து முழு நிலவாய் ஒளிர்கையிலே
இல்லறமாம் நல்லறத்தை இனிதே நடத்திச் செல்கையிலே
ஆனந்த உணர்வொன்றே ஆணின் எல்லை,
ஆரம்பமாவது பெண்ணின் முடிவில்லா தொல்லை-
மசக்கை என்பதோ ரொம்பக் கொடுமை,
கருவைத் தாங்கி வளர்க்க வேணும் பொறுமை,
கண்ணுள் வைத்து பேணிக்காக்கும் தாய்மை,
இத்தனையும் பெண்ணின் தனிப் பெருமை.

அறிந்தே அளித்தான் ஆதி பகவன் பெண்ணிடம்
ஆக்கிப் படைத்து காக்கும் பொறுப்பினை.
மானிடம் தழைக்க மங்கையர் பெற்ற பேறிது,
மானிலம் முழுக்க இதுபோல் வேறு பேறெது?
பெறுதற்கரிய வரமிதை காத்திடுவோம்,
பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community