பத்து மாதம் சுமந்து பெற்ற
தங்கமான தனயனுக்கு
பொருத்தமான துணையொன்றை
தேடி நானும் கண்டெடுத்தேன்.
மனை புகுந்திடும் மங்கல மங்கைக்கு
அந்த மற்றொரு மகளுக்கு
பொன் வளையும், தாலியும்,
சரிகை இழைத்த சேலையும்,
வாழப்போகும் தனி வீட்டில்
சமைத்திறக்க காஸ் அடுப்பும்,
குளிர் சாதன பெட்டி ஒன்றும்,
சாய்ந்துறங்க சோபாவும்,
பார்த்துக் களிக்க கலர் டிவியும்,
சேர்ந்து எங்கும் சென்று வர
சின்னதாய் ஒரு வாகனமும்
செல்ல மகன் சம்பளத்தில்
சிறுகச் சிறுகச் சேமித்து
சேகரித்து வைத்திருந்தேனே!
சிறுசுகள் இரண்டும் சிரித்து மகிழ
கணக்காய் வழியும் வகுத்தேனே!
கூடு கட்டி முட்டையிட்டு,
அடைகாத்து, பொறித்த குஞ்சு
இறக்கை முளைத்து, சிறகு விரித்து
பறக்கும் வரைதான் பெற்றோர் பாடு-
பின்னும் பாரம் சுமப்பதில்லை,
பூனை, நாய்க்கும் இதுவே எல்லை.
கௌரவமான காளையென் மகன்
கனிவாய் பொறுப்பை உணர்ந்தானே!
தன் காலில் நிற்கும் நிலையிலே
சொந்த தந்தை உதவி நாடா தனயன்
மனையாளின் பெற்றோர் மேல்
சுமையை ஏற்றி வைத்திடுவானோ?
தட்சிணை எதையும் ஏற்றிடுவானோ?
போதும் போதும் பெண்ணைப் பெற்றோர் வேதனை
இதுவே இதுவே இனி நம் உயர்வின் பாதை.
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment