கனிந்த பழந்தான்
எளிதாய் உரித்து உண்ண
வாழைப்பழமில்லை
முயன்று வென்றிட
பலாச்சுளையுமில்லை
நிரம்பிய தேனடைதான்
பந்தம் கொளுத்தி ஈ விரட்டி
எடுத்து சுவைக்க இயலவில்லை
“ஆம்” “இல்லை” இரு சொல்லை
விடுத்து நடுவான மௌனம்-
இரும்பு கவசமதன் பின் பதுங்கும்
தயக்கம் தீராத மயக்கம்
கொதித்த பின்னும் பொங்காத
பாலின் பௌதீக விதியென்ன?
மாறியதை மறைக்கின்ற
ரசாயன வித்தையென்ன?
வாழ்வும் இன்றி சாவும் இன்றி
வழக்கின்றி தீர்ப்பின்றி
தண்டிக்கப்படுகிறேனே!
விடையில்லா விடுகதையே!
விலங்கினை பூட்டினாய்
விலங்கின் வெறி கொள்ளவும்
விலகி துறவு பூணவும்
வழி விடாமல் வதைக்கின்றாய்
முன்னாலும் தெரிந்தவரில்லை
பின்னாலும் புரிந்துகொள்பவரில்லை
இடையிலே நான் மட்டும்
விதிவிலக்கோ ஞானியோ
வனிதையின் வண்ணமறிய?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment