அது ஒரு ரகசியம்
அனைவரும் அறிந்த விசயம்
ரகசியமாய் வைத்திருக்க
ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு
புரியாத சேதியில்லை
பூடகமாய் ஊமை மொழியில்
கண்களின் சந்திப்பில்
கைகளின் கோர்த்தலில்
பரிமாறும் பழைய செய்தி
வேறொன்றை நினைப்பதில்லை
கூடிக்கூடி கூட்டமாய்
கிசுகிசுப்பாய் பேசவும்
தலையை மட்டும் ஆட்டவும்
கதகதப்பாய் உணரவும்
எதிர்பார்த்து ஏங்கவும்
கனவு கண்டு தூங்கவும்
முன்னாளின் சக்கரத்தை
அசைபோட்டு மகிழவும்
மூச்சடக்கி காத்திருந்து
பல நாளாய் பொறுத்திருந்து
பக்கம் வரும் பருவத்தை
அரவணைக்க ஆவலாய்
அத்தனை பேரும் பார்த்திருக்க
மந்திரக்கோல் பட்டது போல்
மன்னன் ஆணை கேட்டது போல்
மீட்டிவிட்ட வீணை போல்
எய்துவிட்ட அம்பை போல்
வெள்ளைத் திரை விலகியதே
புல்லும் வெடித்து முளைத்ததே
குப்பென்று பூக்கள் மலர்ந்திட
பட்ட மரம் துளிர்த்திட
சலசலக்கும் ஆறுகளும்
சங்கீதக் குயில்களும்
நிறுத்தி வைத்த இயக்கத்தை
ஆழ்ந்து கிடந்த உறக்கத்தை
நொடியில் உதறி எழுந்திட
பூலோகம் புதுக் கோலம் பூண்டதே
பாரெங்கும் புதுக்கவிதை கேட்டதே
வருடந்தோறும் இப்பருவ நாடகம்
தருகின்ற தனியான ஒரு சுகம்
செவிக்கு எட்டாத சங்கீதம்
கேட்டு சிலிர்க்குது உயிரினம்
தாளம் போடுது உள்மனம்
பொத்திவைக்க முடியாமல்
பூத்து மணக்கும் பருவமிது
கட்டிப் போட முடியாமல்
சதிராடும் வசந்த காலமிது
கொட்டி வைக்க இடமின்றி
பொங்கின்ற பேரெழில்
வழிந்தோடும் வழியெல்லாம்
விழி விரிய விருந்துண்போம்
கலி தீர்ந்து போனதென்று
களிப்போடு நகைத்திருப்போம்
கைகொட்டி மழலை போல்
சத்தமாக மகிழ்ந்திடுவோம்
பேருவகை பிறக்கிறது
புதிதாய் இன்று பூமி பூத்ததிலே
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment