Monday, March 15, 2010

இதயம்

இதயம் ஒரு பண்டமோ பொட்டலமோ
பத்திரமாய் பாதுகாப்பாய் பதுக்கிவைக்க
பார்த்துக்கொள்ளென்று கொடுத்துவைக்க
அடமான பத்திரமோ அடுத்தவர் சொத்தோ
அடையாள அட்டையோ அட்சய பாத்திரமோ
திருவிழாக் கூட்டத்தில் வழி தெரியாமல்
தொலைந்து போகும் சிறு குழந்தையோ
தவறவிட்ட கைக்குட்டையோ குடையோ
திருடப்பட்டிடும் திரவியமோ தேட்டோ
சத்திரமோ சிறையோ மதன மாளிகையோ

இரத்தம் சுத்தம் செய்யும் ஓயா யந்திரமோ
கடிகாரம் போல் இடைவிடா தாளமோ
கல்லென்றும் இரும்பென்றும் பொன்னென்றும்
பூவென்றும் பலவிதமாய் உருவக உலா வருமோ
சுமைதாங்கியாய் சுக வங்கியாய் இரு வேடமோ
உறங்கியும் உறங்காமலும் உயிர் உறையும்
ஓருறுப்போ கவிதைகளின் கருப்பொருளோ
எத்தனை எழுதியும் புத்தம் புதிய பாடமோ
படிக்கப் படிக்க புரியாத ஆழமோ வேதமோ
நொடிக்கொரு நிறம் கொள்ளும் வானமோ
கடிவாளமில்லா அடங்காத குதிரையோ
எண்ணப்பொதி சுமக்கும் கழுதையோ

ஐம்புலனை ஆளும் அதிகார பீடமோ
கற்பனைக் கடலாடும் உல்லாச ஓடமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community