Saturday, March 6, 2010

நிறைவு

கண்ணுக்குத் தெரியாத பந்தய முடிவிற்காக
கை கோர்த்து ஓடுகிறோம் நுரை தள்ளுதே
தடகள போட்டியிதில் இறுதிக்கட்டமிது
தடைகளில்லை தளைகளில்லை திராணியுமில்லை

கோபுரத்தைத் தாங்கும் பதுமைகள் நாமில்லை
குறைந்ததும் நிறைந்ததும் பொருட்டாய் தெரிவதில்லை
இரவும் பகலும் இரண்டாய் இப்போதிருப்பதில்லை
இங்கும் அங்கும் எங்கும் மிதக்கும் நம் உயிர்கள்

சத்திழந்து சருகாக மாறுகின்றன உடல்கள்
சமயோசிதமாய் மாற்றினோம் அட்டவணைகள்
சுமுகமாய் சக்கரங்கள் சுழலும் காலத்திலும்
சுணக்கமாய் எப்போது என்ன வருமோ

உன்னைக் கடித்த கொசு வந்து என்னை கடிக்க
மூட்டுவலிக் காய்ச்சல் நம்மை ஒன்றாய் தாக்க
என்ன செய்வதென்றறியாது நாம் திகைக்க
உணர்கின்ற நிலை கூட ஒருவித நிர்வாணமோ

மணிமணியாய் பெற்றெடுத்தது உண்மை
மண் போற்ற நிற்க வைத்தது பெருமை
வெட்டிவேராய் விழுதுகள் மணப்பது அருமை
வேற்றூரில் பிழைக்க நேர்ந்தது வெறுமை

வலி வந்து முடக்கிப்போட்ட வேளையிலே
வயிறும் மனமும் காய்ந்து போன காலையிலே
காதங்கள் கட்டாயமாய் பிரித்து வைக்கும்போதிலே
கடல் கடந்து வந்து வருடும் பாசக்குரல் காதிலே

அன்று சொன்ன வார்த்தையின் பொருளினை
ஆழமாய் உணரும் அரிய கணமிது
அருளில்லார்க்கு அவ்வுலகுதான் இல்லையாம்
பொருளில்லார்க்கு இவ்வுலகே இல்லையே

பொருள் தேடும் வாழ்வின் பொருள் தேடி
வெங்காயத் தோலை ஒவ்வொன்றாய் உரித்து
கண்ணீர் விட்டு நாம் கண்டறிந்ததென்ன
கவலையை ஒழி நடப்பதெல்லாம் நன்மைக்கே

நிறைவாய் உணர்ந்தால் குறையொன்றுமில்லை
கரையாமல் போகாது மிச்சமுள்ள காலங்கள்
கலந்துரையாடுவோம் காலனெனும் நண்பனுடன்
கனிவாய் கை பிடித்தவன் அழைத்துச் செல்வானே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community