Sunday, March 7, 2010

ஆழி

ஆழியே ஆழ்கடலே நிலத்தின் நீராடையே
கரையருகே அலையடித்து ஆரவாரமா
காணா ஆழத்தில் கனமான அமைதியா
அகண்ட உன் அகத்திலே திமிங்கலமும் சுறாவும்
வாழும் போதும் சிப்பியும் சங்கும் சிறுமீனும்
ஓடித்திரிய இடம் இன்னும் மிச்சமிருக்கு
நாடி அணியும் முத்தும் பவளமும் விளைஞ்சிருக்கு

உன் கரிக்கும் நீரையோ குடித்திட முடியாது
ஆயின் நீ தந்த உப்பின்றி உணவில் சுவையேது
உன் சாரம் நீராவியாய் மேகத்தை சூலாக்கி
வரமாக வந்து கொட்டிய மழையமுதாலே
தழைத்து செழித்து பிழைக்குது வையகம்

கண்டங்களை அணைக்கும் உன் கரங்கள்
காதங்களை அளக்கும் நகரொத்த கலங்கள்
வெப்பக்கரையில் நிற்கும் தென்னை மரங்கள்
வெள்ளிப்பனி மூடிய கடுங்குளிர் துருவங்கள்
மாலுமிகளை ஈர்க்கின்றதோர் தீராக்காதல் வலை
மொழிகளை இனங்களை இணைப்பதுன் வேலை

தாலாட்டி ஓடத்தை ஏந்துகின்ற தாயே
தள்ளாடி தடம் புரண்டும் கூட போவாயே
சித்தம் பித்தாகி புரட்டியும் போடுவாயே
ஊரை உருட்டி உலையில் போட்டு முடித்து
கரை தாண்டி கண்டம் விழுங்கி பசியாறி
ஊறு பல செய்து ஊழித்தாண்டவம் ஆடுவாயே

மறைந்திருக்கும் மர்மங்களுக்கு குறைவில்லை
மாண்டுபோனவர் எண்ணிக்கை தெரிவதில்லை
புதையுண்ட செல்வங்களுக்கோர் அளவில்லை
பிறக்கின்ற கற்பனை ஊற்றுக்கோ நிகரில்லை
செம்புலப்பெயநீராம் எம்குலப் பெண்களொத்து
காடு மலை கடந்து வந்த தீஞ்சுவை நதி நீரும்
உன்னில் உவப்பாக கலந்து உவர்ப்பானதுவே

நுரையோடு எழும்பி சளைக்காது தவழ்ந்து வந்து
கரையோடு உடைந்து போவது களிப்பான காட்சியே
எல்லா இனமும் எல்லா தினமும் உன் கரையை நாடுது
உலகே உன்னோடு விளையாடி இளைப்பாறக் கூடுது
ஆழியே எமை மயக்க மந்திரம் என்ன போட்டாயோ
மடியிலே கிடக்க வைக்க தந்திரந்தான் செய்தாயோ
புயலும் மழையும் உன் பொலிவை மாற்றவில்லையே
வள்ளலாய் உனைப் போல் மாற யாம் கற்கவில்லையே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community