Tuesday, March 16, 2010

சிலப்பதிகாரம்

பாகவதர்: திமிகிட திமிகிட வாத்திய மிருதங்கம் ப்ருமானந்த ஹரே கஜானன தாண்டவ நித்ய ஹரே கஜானன தாண்டவ நித்ய ஹரே!
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே பூம்புகார்ங்கற துறைமுக பட்டணத்திலே கோவலன்கற பெரிய வீட்டு பிள்ளைக்கும் கண்ணகிங்கற மாசறு பொன்மணிக்கும் கல்யாணம் நடந்திச்சி.

பக்கக்குரல் 1, 2: ஆமா, கல்யாணம் நடந்திச்சி. அப்புறம்?

பாகவதர்: கோவலனுக்கு கண்ணகி மேல ரொம்ப பிரியம்.
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்போன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிடலில் செதிக்கிய குரலா
எலிசபெத்து டெயிலரின் மகளா
ஜாகிர் ஹஉசேன் தபலா இவள்தானா
அப்படின்னு பாடினான்

ப. குரல் 1: உவமையெல்லாம் ரொம்ப மாடர்னா இருக்கே?

பாகவதர்: சிவாஜி மாதிரி 'தாழம்பூவே தங்க நிலாவே' அப்படின்னும், எம்ஜிஆர் மாதிரி 'பச்சைகிளி முத்துச்சரம் முல்லைக்கொடி' அப்படின்னும் பாடினதெல்லாம் அந்தக்காலம்!

ப. குரல் 1: 'அந்தக்காலம் அது அந்தக்காலம்'

ப. குரல் 2: சரி, இது செலுலர் போன் யுகம், ஒத்துக்கறோம். கண்ணகியோட feeling என்னன்னு சொல்லுங்க.

பாகவதர்: 'ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே'

அப்படின்னு கோவலன்கிட்ட சரண்டர் ஆயிட்டா.

ப. குரல் 1: அப்போ அவங்க வாழ்க்கைல 'no problem no problem' (லவ் பேர்ட்ஸ் மெட்டு) அப்படின்னு சொல்லுங்க.

பாகவதர்: இல்லியே!

ப. குரல் 1, 2: என்ன ஆச்சி?

பாகவதர்: நம்ம அசருதீனுக்கு பிஜ்லானி வந்து வாய்ச்ச மாதிரி கோவலனுக்கு ஒரு மாதவி வந்து வாய்ச்சா.

ப. குரல் 1: மாதவியா?

ப. குரல் 2: யார் அந்த அப்சரஸ்?

பாகவதர்: 'அழகிய லேலா அது இவளது ஸ்டைலா
சந்தன பேலா இவள் மன்மதப்புயலா
அடடா பூவின் மாநாடா (உள்ளத்தை அள்ளித்தா)

அப்படிங்கற மாதிரி ஒரு ஆடலழகிதான் மாதவி அவளப் பாத்து சொக்கிப்போன கோவலன்

'என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் என்பதை மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்'

அப்படின்னு அவளே கதின்னு கிடந்தான்.

ப. குரல்1: அடப்பாவமே!

ப. குரல் 2: அப்போ கண்ணகியோட கதி?

பாகவதர்: 'என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
சொந்தந்தான் பந்தந்தான் நினைச்சேனே
அந்த நினப்ப மட்டும் எனக்கு விட்டுட்டு போனாரே'

அப்படின்னு அழுத கண்ணும் சிந்திய மூக்குமா கிடந்தா.

ப. குரல் 1, 2: அப்புறம்?

பாகவதர்: கொஞ்ச காலத்துக்கப்புறம் கோவலனோட மோகம் தெளிஞ்சிது.

ப. குரல் 1, 2: மோகம் தெளிஞ்சிது.

பாகவதர்: கண்ணகியோட ஞாபகம் வந்திச்சி

'கண்ணகி கண்ணகி கண்ணகி
என்னை மன்னித்துவிடடி கண்ணகி
கண்ணகி கண்ணகி கண்ணகி
இப்போ நல்லவன் நானடி கண்ணகி' ('அஞ்சல'¢யில் அஞ்சலி பாட்டு மெட்டு)

அப்படின்னு வந்து கெஞ்சினான்

ப. குரல் 1: 'கோவலா கோவலா டேக் இட் ஈசி கோவலா'
அப்படின்னு அவ ஏத்துக்கிட்டாளா?

பாகவதர்: அதுதான் கண்ணகியோட கேரக்டர். ஊதாரித்தனமா கோவலன் சொத்தையெல்லாம் அழிச்சே தீர்த்திருந்தானா குடித்தனம் பண்றது பெரும்பாடா போச்சி

'ஓரண்ணா ரெண்டண்ணா
உண்டியல உடச்சி
நாலண்ணா எட்டண்ணா
கடன உடன வாங்கி
அன்டா குண்டா அடகு வச்சோம்
அஞ்சு பத்து .. பத்தல பத்தல
ஞானப்பழமே ஞானப்பழமே'

அப்படிங்கற கதையா இருந்திச்சி.

ப. குரல் 1, 2: அடப் பாவமே!

பாகவதர்: 'பட்டணந்தான் போகலாமடி கண்ணகி
பணங்காசு சேக்கலாமடி
மதுரை பட்டணந்தான் போகலாமடி கண்ணகி
பணங்காசு சேக்கலாமடி'

அப்படின்னு கோவலன் சொல்லவும் ரெண்டு பேரும் கிளம்பி மதுரைக்கு போனாங்க. கையிலயோ செப்புக்காசு கிடையாது. ஆனா கண்ணகிகிட்ட அவளோட கால் சிலம்பு ரெண்டும் கடைசி சீதனமா இருந்திச்சி. அந்த சிலம்புல ஒன்ன வித்து வர்ற பணத்துல ஏதாவது தொழில் செய்யலாங்கிற ஐடியாவில கோவலன கடைத்தெருவுக்கு அனுப்பினா கண்ணகி,

'கால் சிலம்ப தாரேன் அத வித்துபுட்டு வாங்க
சின்னதா தொழிலேதும் செய்யலாமேங்க' (ஒத்தைரூபா தாரேன் மெட்டு)

ப. குரல் 1, 2: அப்புறம்?

பாகவதர்: பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனோட அரண்மனைல வேலை பாக்குற ஒரு பொற்கொல்லன் ராணி கோப்பெருந்தேவி ஆர்டர் கொடுத்திருந்த சிலம்பில் ஒன்ன அமுக்கிட்டான். தன் குட்டு வெளிப்பட்டிருமோன்னு அவன் பயந்துகிட்டிருந்த சமயம் அவன் கண்ணில கோவலன் பட்டானா, பொற்கொல்லன் மூளை ஜரூரா கணக்கு போட்டுச்சி. எப்படி?

ப. குரல் 1, 2: எப்படி?

பாகவதர்: கோவலன ஏமாத்தி தர்பாருக்கு கூட்டிக்கிட்டு போயி இவந்தான் ராணியோட சிலம்பை திருடினவன்னு சொன்னா தன் திருட்டும் மறைஞ்சிரும், தனக்கு ப்ரமோஷன் கிடைக்கிறதும் நிச்சயம் அப்படின்னு தந்திரமா கோவலன அரண்மனைக்கு அழைச்சிகிட்டு போனான்,

'வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகுதூரமில்லை
நீ வாராய்'

ஆனா அவன் போன நேரம் அங்க நிலைமை சரியில்லை- ராணியம்மா ராஜாவோட கோவிச்சிகிட்டு போயிட்டாங்க. ராஜா அவங்க பின்னால தாஜா பண்ணிகிட்டு follow பண்ணாரு.

'கண்மணியே கண்மணியே சொல்லுறத கேளு
என் கண்மணிக்கு கோபம் வந்தா சிந்தும் பனிப்பூவு'

அப்படின்னு கவலையா இருந்தாரு. அதனால பொற்கொல்லன் அவர்கிட்ட சொன்ன சேதிய அரைகுறையா காதில வாங்கிகிட்டு யோசிக்காம சிலம்ப பறிச்சிகிட்டு திருடன கொன்னுடுன்னு சொல்லிட்டாரு.

ப. குரல் 1, 2: அடப் பாவமே!

பாகவதர்: 'தீர்ப்பு சொன்ன வேகம் என்னவோ
திரும்ப கிடைக்குமோ போனது
மன்னன் மதியை இழந்ததால்
மங்கை வாழ்வும் தொலைந்ததே
இது விதியோ' (நேற்று இல்லாத மாற்றம் மெட்டு)

கணவன் கொலையுண்ட சேதி கண்ணகி காதை எட்டுச்சி.

'ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே'

PSLV ஏவுகணை மாதிரி நேரா பாண்டியன் சபையில போய் நின்னா.

'மன்னர் மன்னனே எனக்கு நியாயம் சொல்லுவாய்
என்ன குற்றமோ என் கணவன் செய்தது'

அப்படின்னு பார்லிமெண்ட்ல எதிர்கட்சி எம். பி. கேக்குற மாதிரி ஆவேசமா கேட்டா. ராணியோட சிலம்பை திருடினதா பழியை கேட்டதும்,

'நீ போட்டு வைத்த பரலும் என்ன சொல்வாய் மன்னவா
ஓகோ! மாணிக்கப்பரலை இதிலே பாராய் மன்னவா
இதுதான் சாட்சி என்னிடம் என் கணவன் பழியை போக்கிடும்
நானே போட்டுடைப்பேன் இந்த சிலம்பை பாராய் மன்னவா'

அப்படின்னு சொல்லிட்டு கோவலன்கிட்டயிருந்து கைப்பற்றிய சிலம்பை கண்ணகி பறிச்சி சிதறுகாய் உடைக்கிர மாதிரி போட்டு உடைச்சா. அதிலேர்ந்து சிதறிச்சி மாணிக்கப்பரல்கள்! பாண்டியன் பெருமையை கூறுவது முத்துக்கள்தானே? அதிர்ச்சியில் மன்னனுக்கு heart attack வந்து instant death. வேரற்ற மரமாய் வீழ்ந்துவிட்டான். அதைப்பார்த்த பத்தினி ராணிக்கு அடிச்ச ஷாக்கில அவளும் பொக்குனு உசிர உட்டுட்டா. ஆனா கண்ணகியின் கோபமோ கொழுந்துவிட்டு எரிஞ்சிச்சி.

ப. குரல் 1, 2: கொழுந்துவிட்டு எரிஞ்சிச்சி.

பாகவதர்: அவளுக்கு வந்த கோபத்துல மதுரைமாநகருக்கு விட்டா பிடிசாபம் 'உடனே இங்கே பந்த் நடக்கட்டும், மின்சாரம் நின்று போகட்டும், குடி தண்ணீர் கிடைக்காமல் போகட்டும், பஸ், ஆட்டோ ஸ்டிரைக் நடக்கட்டும், ஆங்காங்கே குண்டு வெடிக்கட்டும், VIP தவிர மக்கள் அனைவரும் துடித்து சாகட்டும், துடித்து சாகட்டும்! அப்படின்னு ஆங்காரமா சபிச்சிட்டு விர்ருன்னு கேரளாவுக்கு போயிட்டா. அங்க மலை முகட்டில அவ நின்னுக்கிட்டிருந்தப்ப ஒரு பறக்கும் தட்டு வந்துச்சி.

ப. குரல் 1, 2: ஒரு பறக்கும் தட்டு வந்துச்சி.

பாகவதர்: அதுல இருந்த கோவலன பாத்து

'ஆவியே ஆருயிரே
அழைத்துப்போக வந்தீரா
உம்முடனே என்னையும்
சொர்க்கம் அழைத்துச் செல்வீரா' (மாயா மச்சேந்திரா மெட்டு)

அப்படின்னு பரவசமாகி கண்ணகி அந்த UFOவில பறந்து போயிட்டா.
அவங்க ஜோடியா பறந்து போனத பாத்ததுக்கு eyewitness இருந்ததா records சொல்லுது.

'கோவலன் கோவலன் உடன்
கண்ணகி கண்ணகி செல்ல
காவியம் காவியம் பிறந்ததம்மா
அதை ராகமாய் ராகமாய்
நாங்கள் பாடிட பாடிட
நல்ல வாய்ப்பும் கிடைத்ததம்மா' (புல்வெளி புல்வெளி மெட்டு)

'தட்டி தட்டி தாளம் போட்டு
சொன்ன கதையும் முடிஞ்சி போச்சி
திரையிலே கேட்ட வரிகள்
திரும்பவும் கேட்க இசைத்தோம்
நன்றே நன்றே என்று
குற்றங்களை மறத்தலும்
நிறைகளை நினைத்தலும்
என்றும் பெருமை ஆகுமே
மனதில் இன்ப தேனும் ஊறும்
தட்டி தட்டி' (கொஞ்சி கொஞ்சி அலைகள் மெட்டு)

மங்களம் சுப மங்கள்ம் கண்ணகி கதை கேட்ட உங்களுக்கும் சிலப்பதிகார கதை சொன்ன எங்களுக்கும் மங்களம் சுப மங்களம்.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community