Tuesday, March 16, 2010

நல்லதோர் வீணை

இரு வீட்டாரின் பூரண சம்மத்தோடு வெகு விமரிசையாக அவளது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தபோது அவள் சிறகடித்து பறக்கும் சிறு பறவை போல் புதிய வானில் கானம் பாடி பறக்கத் துவங்கிணாள்.

படிப்பு, வசதி, கெளரவம் அனைத்திலும் கச்சிதமாக பொருந்திய அம்சமான சம்பந்தம் என்று ஊரே பாராட்டியது.

திருமணத்திற்கு முந்தைய சில வாரங்களில் இருவரும் சந்தித்துக்கொள்ள பெரியவர்கள் அனுமதிக்காவிடினும் தொலைபேசியில் பேசிக்கொள்ள தடையிருக்கவில்லை. அற்புதமான பொற்காலம் அது. காத்திருந்தாள் மணியடிக்க. நாளின் பெரும்பொழுது பேச்சிலே கழிந்தது.

அவன் செல்லமாய் சீண்ட அவள் பொய்யாய் சிணுங்க, அடடா, ஒவ்வொரு நொடியும் தேன் துளியாய் தித்தித்தது. "யப்பா! என்னமாய் பேசுகிறார்!" அவள் பூரித்தாள் அவன் சாகச பேச்சிலே, சாடை நாடகத்திலே. புரிந்தும் புரியாதது போல் நடிப்பதுதான் என்னமாய் இனிக்கிறது!

"நானென்ன வாய்க்குள் விரலை விட்டால் கடிக்கத் தெரியாத பாப்பாவா?" அவள் மனதிற்குள் கொக்கரித்தாள் அவனிடம் அப்பவியாய் நடித்து முடித்த குதூகலத்தில். குறுகுறுப்பும், கும்மாளமான கற்பனைகளும் கனவிலும் தொடர்ந்து அவளை சுகமாக இம்சித்தன.

காத்திருந்த பொன்னாளும் வந்தது. கோலாகலமாய் திருமணம். மண்டபம் நிறைந்த உற்றாரும், நண்பரும் வாழ்த்த தம்பதியர் ஆயினர்.

அவளது நிர்மலமான இதய வானில், முதலிரவு முடிந்த போது, ஒரு கரும்புள்ளி தோன்றியது. அடுத்தடுத்த இரவுகளில் கரும்புள்ளி பூதாகர மேகங்களாய் வளர்ந்து புயல் இடி மழை வந்தது.

மாறி மாறி உறவினர் வீட்டு விருந்துகளும், வெளியூர் பயணங்களும், விசேஷ வைபவங்களுமாய் பகல்களெல்லாம் உற்சாகமாய் ஓடியதில் அவள் திகைப்பையும், அதிர்ச்சியையும் மறந்து பொறுமை காத்தாள்.

சந்தேகங்கள், சங்கடங்கள் ஒரு கட்டத்தில் மறைக்கும் நிலையை தாண்டாமல் போகுமா? பள்ளியறை போர்க்களமானது. அவள் கன்னங்களில் நீர்க்கோலம். கண்களில் ஏமாற்றத்தின் வலி.

அறையின் ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்தன. புதுமணப்பெண்ணான மகளின் முகத்திலிருந்த வாட்டத்திலேயே, ஏக்கத்திலேயே பெற்றவள் ஆரம்பத்திலேயே துல்லியமாய் படித்துவிட்டாள் நிலவரத்தை, நடந்ததை, நடக்காததை.

செய்வதறியாது திகைத்தனர் அவள் பெற்றோர். மனதிலேயே மருகினர். சூசகமாய் அவன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்டபோது மேலும் அதிர்ச்சி.

அவனை விட்டுக்கொடுக்க தயாராயில்லை தாயார்க்காரி. பிரச்சினையை தலைகீழாய் புரட்டிப் போட்டாள், அலைகிறாள் மருமகள் என்றொரு அவப்பெயரை கூசாமல் வீசி.

வார்த்தைகள் தடித்து, கைகலப்பாகி, நெருங்கியவர் பஞ்சாயத்துகள் பலனின்றி.........மண்பாண்டம் உடைந்து போனது. மணம் முடித்தது நண்பர்கள் போல் வாழ்வதற்கா?

வார்த்தைகள் தடித்து, கைகலப்பாகி, நெருங்கியவர் பஞ்சாயத்துகள் பலனின்றி.........மண்பாண்டம் உடைந்து போனது. மணம் முடித்தது நண்பர்கள் போல் வாழ்வதற்கா?

அதனாலென்ன? நேர்கொண்ட பார்வைக்கும், நிமிர்ந்த நன்னடைக்கும் பழகிய பெண்ணினம் நடக்கும் புதிய பாதையில் போகப் போக முட்புதர்கள் மறைந்து, காரிருள் குறைந்து, முத்துச்சுடர் போல் நிலாவொளியில் கருத்தொருமித்த காதலனுடன் தோளோடு தோளாக நடந்து நிறைவான இன்பம் காணும் காலம் வாராமலா போகும்?

மீட்டும் விரல்களுக்காக காத்திருக்கிறது நல்லதோர் வீணை.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community