Saturday, March 13, 2010

சங்கடம்

நித்யாவுக்கு ஒரு சங்கடம். நித்யா ஒரு இளவயது மங்கை. மூக்கும் முழியுமாக பார்க்க லட்சணமாய் இருப்பாள். நவநாகரிகமாக அலங்கரித்துக் கொள்ளவும் செய்வாள். அவள் மடிப்பு கலையாமல் புடவை உடுத்தி தலையில் மல்லிகையை சூடி வந்தாலும் அழகுதான், சுடிதார் அணிந்து தலைமுடியை ஒரு கிளிப்புக்குள் அடக்கி கூலிங்கிளாஸ் அணிந்து வந்தாலும் அழகுதான். மிதமான ஒப்பனையில் - அளவாக தீட்டிய கண்மை, மேட்சான ஸ்டிக்கர் பொட்டு, லேசாக ஒத்தியெடுத்த உதட்டுச்சாயம் - அவள் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாள்.

அவளுக்கு ஒரு சங்கடம். வழக்கமாக அலுவலகம் முடிந்து வீடு திரும்ப அவள் நிற்கிற பஸ் நிறுத்தத்தில் கொஞ்ச நாளாக அந்த இளைஞனும் நிற்கிறான். சும்மா இல்லை. இவளைப் பார்த்துக் கொண்டு. அதுவும் வைத்த கண் வாங்காமல். அவளுக்கு அதில் வியப்பொன்றும் இல்லை. ஏதோ எழுதாத சட்டம் போல, வட, தென் துருவ ஈர்ப்பு போல, சொல்லி வைத்தாற் போல, ஒரு பெண்ணின் மேல் - அதுவும் இளவயது பெண்ணின் மேல் - கண்டதும் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை ஆண்கள்- வயது பாகுபாடின்றி -கண்களும் தன்னிச்சையாக பார்வையை பதிக்கத் தவறுவதேயில்லை. நித்யாவுக்கு இது ரொம்ப பழகிப்போன விஷயம்.

அந்த இளைஞனைப் பற்றியும் அவள் முதலில் அப்படித்தான் நினைத்தாள். அழகின் ரசிகன் போலும், ரசித்து விட்டு போகட்டுமென்று அதை பொருட்படுத்தவில்லை. இதெல்லாம் சட்டை செய்ய வேண்டிய சமாச்சாரமும் இல்லையே. அதோடு அவன் பார்வையில் பயப்படும்படியாகவோ, அருவருக்கும்படியாகவோ விகாரத்தின் சாயல் ஏதும் இருக்கவில்லை. அப்படியும் அநேக ஆண்வர்க்கங்கள் இருக்கின்றனவே. நன்றாக உடையுடுத்தி, கண்ணியமாக தோற்றமளித்த அந்த இளைஞனின் பார்வையைப்பற்றி மனதில் எச்சரிக்கை மணி அபாய அறிவிப்பு ஒன்றையும் ஒலிக்காததினால் நித்யா தான் பாட்டுக்கு போய் வந்து கொண்டிருந்தாள்.

நாளாக, நாளாக நித்யாவுக்கு அந்த இளைஞனின் பார்வை சற்றே நெருடத் துவங்கியது. அவன் ஏதோ ஒரு தீவிரத்தில் இருப்பது புரிய வந்தது. அவள் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில் அவன் தன் நண்பனிடம் பேசியது இருந்தது. போகிற வழியில் இவனைப் பார்த்த இவன் நண்பன் தன் பைக்கை நிறுத்தி காலை ஊன்றிக் கொண்டே, “என்னடா, ளையே பாக்க முடியல. எப்பத்தான் கல்யாணச் சாப்பாடு போடப்போற?” என்று கேட்டான். அதற்கு இவன் நித்யாவை ஒரு முழுப்பார்வை பார்த்துவிட்டு “கூடிய சீக்கிரம்” என்றான்.

நித்யாவுக்கு நிம்மதியாக தூங்க முடியவில்லை. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியாக வேண்டுமே என்று புரண்டு புரண்டு படுத்த போது ஒரு நல்ல யோசனை தோன்றியது.

மறுநாளும் அந்த இளைஞன் தவறாமல் அவள் வரும் நேரம் அந்த பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தான். அப்போது ஒரு இளைஞன் தன் ஸ்கூட்டரை நித்யாவை நெருங்கி வந்து நிறுத்தினான். அவன் கூட பயணம் செய்து வந்த ரோஜாக்கொத்து போன்ற அழகிய சிறுமி அவளைப் பார்த்து பரவசமாக “மம்மி” என்று கூவினாள். நித்யாவும் குழந்தையின் கன்னத்தை செல்லமாக நிமிண்டி விட்டு ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்து கொண்டாள். வண்டி கிளம்பியதும் நித்யா அந்த இளைஞனின் பக்கம் பார்வையை ஓட்டிய போது அவன் கண்களில் தோன்றிய அதிர்ச்சியை நன்றாக கவனிக்க முடிந்தது. அவள் மனமும் சாந்தி அடைந்தது.

நித்யாவின் பிறந்த வீட்டில் பழமையான பழக்க வழக்கங்கள் அடியோடு புறக்கணிக்கப் பட்டன. புகுந்த வீட்டிலோ அதைவிட முற்போக்கு சிந்தனை கொண்டிருந்தனர். தலை வகிட்டில் குங்குமம் இடவோ, காலில் மிஞ்சியையும், கழுத்தில் தாலியையும் அணியவோ அவளை யாரும் வற்புறுத்தவும் இல்லை, அவளுக்காக தோன்றவும் இல்லை. இவையெல்லாம் புறச்சின்னங்கள்தானே என்று அலட்சியமாக எண்ணியதால் விளைந்த சங்கடத்தைப் பார்த்ததும் அவள் வியப்புடன் தன் போக்கை மறுபரிசீலனை செய்தாள்.

வறட்டுத்தனமாய் பெண் விடுதலை பேசி, அபத்தமான காரியங்களை செய்யும் இயக்கத்தில் அவளுக்கு ஈடுபாடு ஒன்றும் கிடையாதாகையால் அடுத்த நாள் அலுவலகத்துக்கு புறப்படும் போது தன் கணவன் சபை நிறைந்த உறவினர், நண்பர்கள் சாட்சியாக, சம்பிரதாயமாக தனக்கு அணிவித்த பொன்தாலியை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டாள். ஒருவித பூரிப்பும், பெருமையும் உண்டாவதை உணர்ந்தாள். இனி இது எப்போதும் என் நெஞ்சில் தவழட்டுமென்று எண்ணிக் கொண்டு மன நிம்மதியுடன் வெளியே கிளம்பினாள்.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community