Monday, March 15, 2010

மனம்

பல்லடுக்கு மாளிகை
புதிரான என் மனம்
பல்லாயிரம் அறையிலே
உறையும் நினைவுகள்
பலவித நிலையிலே
பரந்து கிடக்குதே

பயந்து பதுங்கி
ஒளிந்து ஒதுங்கி
உயர்ந்து ஓங்கி
விரட்டித் துரத்தி
வாட்டி வதைத்து
வருடித் தடவி

கடையும் மத்தாய்
குடையும் வண்டாய்
கொட்டும் குழவியாய்
குற்றால அருவியாய்
குளம்பிய குட்டையாய்
செதுக்கும் உளியாய்
சிதைக்கும் கழியாய்
புதைத்த விதையாய்
பறக்கும் சிறகாய்
எம்பும் பந்தாய்
எரிக்கும் நெருப்பாய்
இதமாய் நிலவாய்
ஆறா ரணமாய்
ஆறிய வடுவாய்
ஆழியுள் துரும்பாய்
ஆலைக் கரும்பாய்
உருகும் பாகாய்
இளகா பாறையாய்

மௌனங்கள் மெதுவாய்
கால் பொத்தி நடக்கும்
சப்தங்கள் அங்கு
சதிராடிக் குதிக்கும்
சகல சாகசமும்
சட்டங்களாகும்

மோனங்கள் தவங்கள்
சமர்கள் விவாதங்கள்
வேள்விகள் கேள்விகள்
வேதங்கள் மந்திரங்கள்
தன்னிலை விளக்கங்கள்
தேடுகின்ற தகவல்கள்

ஆழ்கடல் அமைதியாய்
அமிழ்ந்து கிடந்தும்
அலையோர இரைச்சலாய்
பொங்கியும் நுரைத்தும்
நிலையில்லா காற்றாய்
நெருங்கியும் நகர்ந்தும்

வினைகள் பலவாய்
ஆரவார எண்ணங்கள்
செய்கின்ற ஆட்சி
தெரியாத காட்சி
திரை மூடிய மேடை
அரங்கேற்றும் நாடகம்

கடைந்து முடியுமோ
அமிர்தம் திரளுமோ
மோதி முடிந்த பின்
மோட்சம் கிட்டுமோ
சிறுதுளி கரைந்து
பெருவெளி எட்டுமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community