Thursday, March 11, 2010

தேர்தல் திருவிழா

ஒலியும் ஒளியும் கூடி வரும் உற்சாகத் திருவிழா
தோரணங்கள் தொங்க கொடி பறக்கும் ஒரு விழா

மக்கள் சேவை மகேசன் சேவையென கோஷம்
பதவி பெற்று செல்வம் பெருக்க போடும் வேஷம்

ஏழையை ஏமாற்ற கயவர் கூட்டம்
துணிந்து ஆடும் நூதன சூதாட்டம்

அரசியலில் நிலையான நண்பரில்லை
அவர்கட்கு நிரந்தரமான பகைவரில்லை

இன்றிங்கிருப்பார் இனிதே காலந்தள்ள
நாளையங்கிருப்பார் இன்னும் அள்ள

எத்தனை எத்தனை தாவல்கள்
மனித மூதாதையர் சாயல்கள்

பச்சை மேய்ச்சல் வயல்கள்
எங்கென்று தேடும் கண்கள்

மழைக்குப் பின் வெடித்த காளான்கள்
புதிது புதிதாய் முளைக்கும் கட்சிகள்

ஊரறிந்த எத்தனையோ கேடிகள்
தேர்தலில் கொட்டுவர் கோடிகள்

அமோக விளைச்சல் தரும் விதைகள்
அவர்கள் கைகளில் பல வித்தைகள்

அவர் கைகளில் தெளிவாய் ரத்தக் கறைகள்
அதை மூடி மறைத்திடும் கட்சிக்கரைகள்

தொன்னையும் நெய்யும் ஒன்றுக்கொன்று ஆதாரம்
இங்கு அரசியலும் திரையுலகும் கலக்கும் கலாசாரம்

இவர் கூத்துப் பார்க்கக் கூடிடும் பாமரர்கள்
சொற்ப லாபத்திற்காய் ஏமாறும் பலியாடுகள்

உல்லாசபுரியில் திளைக்கும் தலைவர்கள்
உயிரைக் கொடுத்திடும் தொண்டர்கள்

ரசிகர் அணியெனும் பகுத்தறியா இயந்திரங்கள்
இயக்கிட இவரிடம் எத்தனையோ தந்திரங்கள்

காற்றோடு பறக்கின்ற சருகுகள்
தினமும் மாறுகின்ற கொள்கைகள்

கூடிக் கொள்ளையடிக்கும் கூட்டணி
குடியரசாட்சியின் தீராததோர் பிணி

வாக்காளர் பட்டியலில் நிறைய பொய்கள்
சேர்க்கப்படவேயில்லை பல பெயர்கள்

வாக்காளரைப் பிடிக்க பல தூண்டில்கள்
நியாயமில்லா பல சலுகைகள் இலவசங்கள்

உழைத்து உயரும் லட்சியங்கள்
உயர விடாத சுலப லட்சங்கள்

ரத்தத்தின் ரத்தமேயென மேடையில் முழக்கங்கள்
தன் ரத்தங்கள் தழைக்க உழைப்பது வழக்கங்கள்

பேசுவது அத்தனையும் பசப்பு மொழிகள்
தேடுவது திரவியம் தரும் குறுக்கு வழிகள்

லாபநட்டம் கூட்டிக் கழிக்கும் மன்னர்கள்
ஏமாந்த ஏழையின் நாடியறிந்த வித்தகர்கள்

ஒழுங்கைக் காத்திடவே பல சட்டங்கள்
உடைக்க இருக்கே குயுக்தித் திட்டங்கள்

பொக்கை வாயுடன் சத்தியம் வெல்லுமென சிரித்தார்
பச்சை நோட்டிலவர் தேர்தலில் வென்றிட சிரிக்கிறார்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community