Friday, March 12, 2010

சாரம்

காற்றும் மழையும்
வெயிலும் குளிரும்
பருவ நியதிகள்
பாலைகள் சோலைகள்
மலைகள் மடுக்கள்
இயற்கையின் இயல்புகள்

ஓரிடம் துரத்தும்
வேறிடம் இழுக்கும்
காந்தத்தின் இருதுருவங்கள்
இரும்பின் ஈர்ப்புகள்
ஒட்டிக் கிடக்கவோ
ஓடி ஒளியவோ
உன்னால் முடியுமோ

அவரவர் சிலுவையை
அவரவர்தானே
சுமக்க வேண்டும்
வேறொரு தோளுக்கு
மாற்ற முடியுமோ
தாயும் சேயும் னாலும்
வாயும் வயிறும் வேறல்லவோ

அவரவர் வலியை
அவரவர்தானே
உணர முடியும்
செருப்பின் கடியை
அணிந்தவனே அறிவான்
தீர்க்கவேண்டிய
கடன்கள் எத்தனை

எத்திசை அழைக்கிறது
எவ்விடம் இனிக்கிறது
எதுவோ தடுக்கிறது
முளையில் கட்டிய பசுவல்ல
தறியில் பாவும் நூலல்ல
தேடும் இலக்கெது
திகட்டாத நிலையெது

தானாய் துன்பம் வரும்
இன்பமும் அப்படியே
தானாய் இரண்டும் கரையும்
கடலில் அலைகள்
ஓய்வதேயில்லை
ஓடமாய் மிதந்திடு
ஓய்வுக்கு காத்திரு

விதைகள் தானே முளைக்கும்
மரங்கள் தானே பிழைக்கும்
மண்ணாய் மழையாய்
உன்னை உணர்வாய்
வளரும் காட்சியை
வேடிக்கை பார்த்திரு
எட்டியே இருந்திடு

மரித்த உயிர்கள்
மறைவதில்லை
மின்னும் கோடி
விண்மீன்களாய்
உலகை உறவை
நோக்கும் கண்கள்
அமிழ்தான கணங்கள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community