Friday, March 12, 2010

ஜனனம்

கல்யாண சந்தடியிலிருந்து விடுபட்டு, நண்பர்கள், உறவினர்கள் கேலிப்பேச்சுக்கள் காதுக்கெட்டாத தூரத்தில் அவனும், அவளும் அந்த மலைவாசஸ்தலத்தை அடைந்தனர்.
குறுகுறுப்புடன் அவளும், குதூகலத்துடன் அவனும் புதியதோர் உலகில் அடியெடுத்து வைத்தனர். புதிய பாடத்தை உவகையுடன் படிக்க ஆரம்பித்தனர். மணமேடையில் இணைந்து நின்ற போதிருந்த நெருக்கம் சுற்றியிருந்த கூட்டத்தால் கட்டுப்பாட்டை காத்தது. இப்போது சீசன் முடிந்திருந்த காரணத்தால் சந்தடியில்லாதிருந்த அந்த குளுகுளு நகரம் இளஞ்சிட்டுக்களின் தேனிலவுக்கு தங்குதடையற்ற சுதந்திரத்தை அள்ளி வழங்கியது.
தனிமைத் தேனை அவனும் அவளும் துளித்துளியாய் சுவைத்து மகிழ்ந்தனர். அர்த்தமேயில்லாத பேச்சுக்கள், அர்த்தம் நிறைந்த பார்வைகள். அர்த்தமேயில்லாத சிணுங்கல்கள், அர்த்தம் நிறைந்த தேடல்கள். அர்த்தமேயில்லாத சிரிப்புகள், அர்த்தம் நிறைந்த மௌனங்கள்.
பறவையினங்களின் கீதத்திலே, பல வண்ண பூக்குவியலிலே, எங்கும், எதிலும் உல்லாச உலகமே இசைவான லயத்திலே இயங்குவதாய் உணர்ந்து கிறங்கினார்கள். சிருஷ்டியின் தேவ ரகசியத்தை உணர்ந்து சிலிர்த்தார்கள்.
நேற்று வரை அந்நியனாய் இருந்தவனுடன் நிறமற்ற மழைநீர் செம்மண்ணில் விழுந்ததும் செம்புலனான கதையாய் தான் கலந்த விதத்தை எண்ணியெண்ணி வியந்தாள் அவள். ஆட்கொண்டவனே அடிபணிந்தவனும் ஆகும் அதிசயத்தை அனுபவித்தான் அவன்.
வருங்காலத்தின் வரைபடத்தை வார்த்தைகளில் வரைந்தார்கள்:
“நீங்க ஆம்பிளைன்னு திக்கம் பண்ணுவீங்களா அல்லது என் பேச்சை கேட்பீங்களா?”
“மகாராணி பேச்சுக்கு மறுபேச்சு கிடையாதம்மா.”
“ஐயே! அடிமைத்தனமா தலையாட்டிக்கிட்டே இருந்தா எனக்கு பிடிக்காதப்பா.”
“யாரும் யாருக்கும் அடிமை இல்லை. பெண் தலைமையிலேதான் மனித வர்க்கம் தலைநிமிர்ந்து நடந்ததா சரித்திரம் சொல்லுது.”
“நான் சர்வாதிகாரியா மாறமாட்டேன்னு நினைக்கிறீங்களா?”
“நம்பிக்கைதான் பெண்ணே.”
“ஆனாலும் இவ்வளவு நம்பிக்கை ஆகாதய்யா.”
“ஆண்டவனே பெண்ணை நம்பி தன் சிருஷ்டி பெட்டகமா பெண்ணை உருவாக்கியிருக்கிறப்போ சாதாரண ஆண் நான் உன்னை நம்பக்கூடாதா?”
“ஓ! மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மான்னு கவிமணி பாராட்டியதும் இதற்குத்தானோ?”
புல்வெளியில் புரண்டுகொண்டு மலைமுகட்டை தழுவி நழுவும் மேகக்கூட்டத்தை ரசிப்பது சுகமாய் இருந்தது.
“அந்த மேகங்கள் ஏன் மலையுச்சியிலே உலாவுதப்பா?”
“விஞ்ஞான விளக்கம் வேண்டுமா, கவிஞனின் கண்ணால் பார்த்துச் சொல்லவா?”
“விஞ்ஞானியும் கவிஞனும் விரோதிகளா?”
“போடி பைத்தியமே! சத்தியத்தை, நித்தியத்தை வெவ்வேறு கோணத்தில் பார்த்தால் விரோதியாவார்களாடி? சிருஷ்டியின் விந்தையை இருவரும் இரண்டு விதத்தில் மொழிபெயர்ப்பவர்களடி. ஆண்டவனின் படைப்பின் ரகசியத்தை தரிசித்த கணத்தில் உணரும் அற்புத பேருவகை ஒன்றேதான்.”
“ஒரு பெரிய ஏற்பாட்டின் அழகான, அளவான அங்கம்தான் ஒவ்வொரு ஜீவனும்னு விளங்குதப்பா.”
கன்னத்தோடு கன்னம் உரச காதோடு கிசுகிசுத்தான், “எனக்கு உடனே குழந்தை வேண்டும், கண்ணே.”
“ஒரு பத்து மாசம் காத்திருக்க முடியுமா, கண்ணா?”
“சொன்ன பேச்சை காப்பாத்தினாச் சரி.”
சொன்ன பேச்சைக் காப்பாற்றினாள். குழந்தை பிறந்தது. வளர்ந்தது. பள்ளிக்கும் போனது. மாலையில் தந்தை அலுவலகத்திலிருந்து வந்ததும் மடியேறி அமர்ந்து மழலை மொழியில் தன் சின்ன உலகத்து சேதியெல்லாம் செப்பியபோது மனமெல்லாம் இனித்தது.
இனிய இல்லறம் இப்படியே சென்றிருந்தால் தேவலையே. தெளிந்த வானில் மேகமூட்டம் தோன்றியது. அவள் தேகம் மெலிந்து சோகையாய் மாறிவரக் கண்டான் அவன். சீக்கிரமே களைத்துப் போனாள். மாதவிலக்கில் பிரச்சினைகள்.
நல்ல டாக்டரம்மாவிடம் காட்டினார்கள். பலவித பரிசோதனைகளுக்குப் பின் கர்ப்பப்பையில் கட்டி என கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
“இனி பயமில்லை. மாமூலான வாழ்க்கை நடத்தலாம். ஆனால் மீண்டும் கருத்தரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்,” என்று எச்சரித்தார் டாக்டரம்மா.
சில காலம் பிரச்சினையேதுமில்லாமல் சென்றது. மீண்டும் நோயுற்றாள் அவள். எவ்வளவோ ஜாக்கிரதையாய் இருந்தும் அவள் கருவுற்றிருந்தாள். அதோடு மீண்டும் புற்று வளர்ந்து முதுகுதண்டைத் தாக்கத்துவங்கியிருந்தது.
டாக்டரம்மா “இந்தக்கருவை உடனடியாக கலைத்துவிட வேண்டும். அடுத்து கதிர்சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்,” என்றார்.
அவளோ, “ப்ளீஸ், டாக்டரம்மா, கருவை கலைக்கச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் சிகிச்சைகள் வளரும் சிசுவை பாதிக்கும் வாய்ப்பிருப்பதால் அவையும் வேண்டாம்.”
அதிர்ந்தார் டாக்டரம்மா,”என்னம்மா சொல்கிறாய்? உன் உயிருக்கு ஆபத்து வந்திருப்பதை நீ உணரவில்லையா?”
“என் உயிர் பெரிசில்லை, டாக்டரம்மா. வளரும் சிசுவின் உயிர் அதைவிட முக்கியம். அதை கொல்லுவதை என்னால் நினைத்தே பார்க்க முடியாது.”
“பைத்தியம் மாதிரி உளறாதே. உன் கணவரையும், உன் மூத்த குழந்தையையும் எண்ணிப்பார்த்தாயா? அவர்களுக்காக நீ வாழ வேண்டாமா?”
“அவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். என் வயிற்றிலுள்ள சிசுவுக்கு நாந்தான் ஆதரவு. நான் வாழும் ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் இன்னும் ஒரு நாள்.”
“நீ சிகிச்சை பெறாவிட்டால் நிச்சயம் இறந்து போவாய். பிறக்கப்போகும் குழந்தையும் தன் சகோதரனுடன் சேர்ந்து தாயற்ற அநாதையாய் தவிக்கும். இதையெல்லாம் நன்கு யோசித்து நல்ல முடிவெடு.”
“இதில் இனிமேல் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. என் முடிவில் மாற்றமில்லை.”
“பலாபலன்களைப் பற்றி சிந்திக்காமல் செயல் படாதே.”
“என்னை பொறுத்தவரை மரணம் சாதாரணமானது. ஆனால் ஜனனம் உன்னதமானது.”
ஒரே பிடிவாதமாய் இருந்தாள் அவள். அவனும் எவ்வளவோ மன்றாடினான். பயனில்லை. வலியை மறக்க அவ்வப்போது மருந்து எடுத்துக் கொண்டாள். வைராக்கியமாய் நோயோடு போராடியவள் ஒரு நாள் தாங்கமுடியாமல் கோமாவில் விழுந்தாள்.
டாக்டர்கள் பெரிய உயிரா, சின்ன உயிரா என்று யோசித்த வேளையில் அவன் அவளுக்காக, அவளது தவத்தை கூடவே இருந்து பார்த்த நினைவில், குழந்தையைக் காப்பாற்றித்தருமாறு வேண்டிக்கொண்டான்.
அவளது உயிர்ப்பறவை விடுபட்டு பறந்த வேளையில் புதிய ஜீவனின் பூபாளம் கேட்டது.


(பல வருடங்களுக்கு முன்பு ஹிந்து பேப்பரில் வெளியான ஒரு இத்தாலிய பெண்ணின் உண்மைக்கதையே இக்கதையை எழுத தூண்டுகோலாய் அமைந்தது.)

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community