வெள்ளித்திரை வெளிச்சத்தில்
வெகுஜன ஊடகத்தில்
மரபுகள் இல்லா
புதுக் கவிதைகள்
மதுரமில்லா
வெறும் ஓசைகள்
நல்ல பயிரிடை
நலிந்த களைகள்
சுத்தமில்லா மொழி
சத்தமான ஒலி
பாதி புரியவில்லை
புரிந்தது பிடிக்கவில்லை
சிதைந்த உச்சரிப்பு
புதைந்த புலனின்பம்
கலப்பட சந்தங்கள்
உலகமய சங்கங்கள்
அந்தரங்க தனிமை
அவையேறும் புதுமை
கூட்டத்தோடு காதலர்
கூத்தாடும் கலாசாரம்
விரசத்தில் விஞ்சி
வித்தியாசம் நாடி
விதவிதமாய் ரோதனை
விந்தையான சாதனை
குடியோடு பாட்டு
குட்டியோடு ஆட்டம்
குத்துகிற கும்மியாட்டம்
காசின் மேலே நாட்டம்
காதில் பாய்வது
இன்பத் தேனா
காய்ச்சிய ஈயமா
இசையின் பெயரில்
இம்சை திரையில்
இணையாய் அசைவுகள்
சாமியாடும் உடல்கள்
ஒட்டி உரசி
பின்னி பிசைந்து
முக்கி முனகி
தொட்டுத் தடவி
உருண்டு புரண்டு
கவ்வி கவுந்து
பொருள் பச்சை
பதிவும் கொச்சை
காதும் கண்ணும்
ஒன்றாய் நோகுது
இதுவோர் வன்முறை
இக்கட்டில் ரசனை
கற்பனை வறுமை
அழகின் வெறுமை
வரவும் செலவும்
கோடிகள் என்பர்
வர்த்தகமாகும் கலை
விலை மாதின் நிலை
வக்கிரத்தின் எல்லை
வெட்கமே இல்லை
அபத்தமா ஆபாசமா
அதிகமெது அறியோம்
அதிர்ச்சியா ஆயாசமா
அருவருப்பா எரிச்சலா
எதுவோவா எல்லாமேவா
எவரே கூற வல்லார்
சின்னத்திரையில் இதை
சித்தரிக்கவோர் போட்டி
சின்னத்தனமாய் இளமை
சீரழிகின்ற கொடுமை
கனவுகள் துரத்தி
திறமைகள் ஏற்றி
வளரும் வயதில்
வீணாகும் வாழ்வு
சிற்றின்ப சேற்றில்
சிக்குது தலைமுறைகள்
துய்க்கவும் விதிமுறைகள்
வகுத்த நம் கரைகள்
காப்பாற்றி போற்றிட
கட்ட வேண்டும் அணைகள்
காட்டாற்றை தணித்து
பாசனம் செய்திட்டால்
பயிர் செழித்திடாதோ
தாய் தலை நிமிராதோ
No comments:
Post a Comment