வானவில்லின் வர்ணமாய் ஏழு நாளும் அன்று
வாரம் முழுதும் நரகமாய் நகருவதேன் இன்று
காதல் மாறுமோ காணாமல் போகுமோ
கற்பூரமாய் கரைந்துதான் போகுமோ
ஊரறிய கொட்டிய மேளமும் கட்டிய தாலியும்
ஊறெனக்கோ கொட்டடி பசு நானாவேனோ
பிறவிகள் தாண்டி தொடரும் பந்தமொன்று
வழக்கில் முறிந்திடும் சொந்தமானதின்று
ஒன்றா இரண்டா பொய்யாய் போன கனவுகள்
முள்ளாய் உறுத்தும் முரண்பட்ட கோணங்கள்
சரிபாதி சுமக்க கடமையிருக்க
பொறுப்பை உதறி நழுவுகின்றான்
சம உரிமை எனக்கில்லை அவள் ஆட்சியில்
அப்புறமும் அடங்கவில்லை அவள் பேராசை
காய் நறுக்கித் தர மறுக்கின்றான்
விடுமுறை முழுவதும் தூங்குகிறான்
அடடா அம்மாவின் அந்த கைமணம்
அது இனிமேல் எனக்கு கனவில் மட்டும்
கை நிறைய இருவர் சம்பாதிக்கையிலே
சில்லறைத்தனமாய் ஒரு கணக்கெதற்கு
தவணைக்கு காசை தண்ணீராய் ஓடவிட்டு
சொகுசுக்கு மூச்சு முட்ட என்ன ஓட்டமோ
கண்ணெடுத்தெனை பார்க்கப் பிடிப்பதில்லை
கண்ணே மணியே என்று கொஞ்சுவதில்லை
கவச குண்டலத்தோடு பிறந்தானாம் கர்ணன்
காதில் செல்போனோடு பிறந்தவளோ இவள்
பிள்ளைக்கனியமுதிதுவோ இல்லையில்லை
பிடுங்க வந்த கட்டெறும்பே உண்மையிலே
பேயுறக்கம் உறங்குகிறாள் பெற்றவளிவள்
பிஞ்சுக் குழந்தை சிணுங்கப் பொறுக்கலாமோ
எது சொன்னாலும் காதில் ஏறுவதில்லை
ஆணெனும் ஆணவம் அகங்காரம் அதிகாரம்
எள்ளளவும் பொறுமையில்லை பேச்சிலே
கடுகாய் வெடிக்கிறாள் கண்ணியமின்றி
இனிக்க இனிக்க பேசியதெல்லாம் கபடமோ
இனி என் செய்வாள் என்ற தைரியமோ
சித்திரப்பாவையாய் சிரித்தவள் இவளா
சித்திரவதை ஏன் என்னை செய்கிறாள்
குறைகளும் குற்றச்சாட்டுக்களுமா இல்லறம்
குனியக் குனியக் குட்டுவான் அறியேனோ
குளத்து நீரை குடிப்பதுபோல் நடித்தது மானிரண்டு
குறிப்பறிந்து குளிர வைப்பதன்றோ தாம்பத்யம்
கிள்ளுக்கீரை நானில்லை சீண்டிப் பார்க்க
காவலனாய் நீயிருக்க தேவையெனக்கில்லை
நிழலை இவள் விரும்பவில்லை விந்தையே
கண்மணி ஓடுகிறாள் கானலின் பின்னே
உள்ளங்கையில் உருளுது உலகப்பந்து
உயிர் பிழைக்க ஏராள வழிகளுண்டு
புதிய சாத்திரங்கள் பேசுகின்றாள்
புரியாத புதிராக மாறிவிட்டாள்
மேலை நாடு கண்ட பெண் சுதந்திரம் உண்டிங்கு
வாலை ஆட்ட முடியுமோ கர்சித்த சிங்கமினி
பட்டங்கள் கொட்டிக்கிடக்கும் காலங்கள்
சட்டங்கள் அனுமதிக்கும் கோலங்கள்
மெல்லினம் வல்லினம் ஆனது இலக்கியப்பிழை
இடையிலே ஆணினம் கற்குது புது இலக்கணம்
No comments:
Post a Comment