ஆதி சிவன் அன்றே தந்தான்
பாதி உடம்பை பாரியாளுக்கு
மீதியையும் அவளே ஆண்டாள்
நீதி கேட்ட ஆண்களில்லை
வாடிக்கை மறந்த நாட்களிலே
வேடிக்கை நடக்குது நாட்டிலே
கொடி பிடிக்கும் காட்சியின்று
பிடித்திட மூன்றிலொரு பங்கை
தோள் கொடுக்க வேண்டுந்தான்
தோளுக்கு மாற்றிட வேண்டுமோ
தானும் வலியவள் ஆனவள்தான்
தான் மட்டுமாய் நின்றிடலாமோ
மனைவியாய் நடந்து பழக நாளாகுமாம்
தாயாகிட ஆலோசனை செய்யணுமாம்
தானாய் மொட்டு மலரும் தயங்காமல்
பெண்ணாய் வாழக் கல்வி இருக்குதோ
மீன் குஞ்சு நீந்தக் கற்பதில்லை
பெண்மை குணங்கள் இயல்பாகுமே
சொன்ன மொழியில் ஐயம் பிறக்குது
என்ன நடக்குதின்று உலகினிலே
அடையாளம் தொலைத்த அகதிகளாய்
இடை சிறுத்தவர் இன்றிருக்கும் நிலை
நடை உடை பாவனை மாறியது கண்கூடு
கிடைத்த வெற்றியோ ஒரு வெறுங்கூடு
எதை எண்ணி எழுச்சி கொண்டாய் பெண்ணே
அதை அடைய எத்தனை இழந்தாய் கண்ணே
கதை இல்லை நீ இல்லாது மாசறு பொன்னே
இதை நீ உணராவிடில் மடிந்திடும் மண்ணே
No comments:
Post a Comment