அலையாலே தாலாட்டி
அருந்துயில் தந்தவளே
ஆவேசமாய் இழுத்தின்று
பெருந்துயிலில் ஆழ்த்தியதேன்?
வயிற்றை கழுவ வழியானவளே
வயிறு நிறைய விழுங்கியதேன்?
வெறியாட்டம் ஆடியதேன்?
காயசண்டிகை ஆனதேன்?
பட்டும் பகட்டுமறியா எளியவரை
பாட்டும் பரதமும் அறியா பாமரரை
குடிசைக்குள் குலக்கொழுந்துடன்
குடியிருந்த குடும்பங்களை
பூண்டோடு அழித்ததேன்?
புரண்டு வந்த ஊழியே!
பொறுப்பில்லா ஆழியே!
எச்சிறுமை கண்டு நீ
பொங்கி எழுந்தனையோ?
பாவங்கள் பொறுக்காமல்
அப்பாவிகளை அழைத்தனையோ?
நோயும் நொடியும் அண்டாமல்
பசியும் மூப்பும் வாட்டாமல்
பத்திரமாய் காத்திடவே
மொத்தமாய் அள்ளிச் சென்றாயோ?
பாடம் புகட்ட வந்தாயோ?
வஞ்சம் தீர்க்க நினைத்தாயோ?
அகந்தை அழிக்கச் சொன்னாயோ?
அன்பை வளர்க்கச் சொன்னாயோ?
அர்த்தமில்லா பேரழிவென்று
வெதும்புகிறோம் நாமின்று
தீயின் நாவால் பிஞ்சுகளை
தின்ற சூடு ஆறுமுன்னே
அரக்கி போல அதிர வந்தாய்
அடக்கி விடு உக்கிரத்தை
ஆடாதே ஊழி தாண்டவத்தை
காட்டாதே உன் கோர முகத்தை
அமைதியாய் நீ நடந்து
நல் வழியை வகுத்துக் கொடு!
No comments:
Post a Comment