Monday, October 12, 2015

சம்சாரம்

IndiBlogger - The Indian Blogger Community கண்ணுக்கு மை தீட்டும் 
கரு மீன் கண்ணழகியே 
கண்ணாடி முன்னால் ஏன் 
கழிக்கின்றாய் பொழுதினை 

மை பூச பழகிய நாள் முதலாய் 
நடை தளர்ந்த இந்நாள் வரை 
என் தோழியானவளை இனியும் 
பழிக்காதே பொல்லாத பரமசிவனே 

என்னடி எந்நேரமும் தாளிப்பு 
சின்னக் குறுக்கும் கடுக்க 
அடுப்படியில் அங்கயர்கண்ணி 
அல்லாடிட நானும் சகியேனடி 

சுடத்துவங்குது அடுப்புக் கணப்பு 
பிடறிக்கு பின்னாலேயோ உம்மூச்சு 
இடர் செய்யாதே இடையினிலே 
ஆடலரசா சுடலைவாசா மகேசா 

காய் நறுக்கித் தட்டுக் கழுவி 
கணிணிதனிலே தட்டித் தட்டி 
வெண்டைப்பிஞ்சு விரல் நோகுமே 
சொடக்கெடுக்கட்டுமா சொக்கியே 

சவலைப்பிள்ளை போல் அழுவாயோ 
காலைச் சுற்றும் குட்டிப் பூனையோ 
இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்ள 
உடுக்கையடிக்கும் ஓங்கார உலகநாதா 

துவைத்த துணி காயப் போடட்டுமா 
எக்கி எம்பி ஏனுனக்கு சிரமமோ 
காய்ந்த துணிகளை மடிக்கட்டுமா 
மடிகலையா மங்கையர்க்கரசியே 

புறவுலகை புறக்கணித்தாய் 
என் காவல் ஒன்றே கடமை 
என்றே உனக்குள் கணித்தாய் 
ஏகாம்பரனே ஏகாந்தசித்தனே 

துள்ளிக் குதித்தோடிய றெல்லாம் 
அமைதியாய் கடலில் கலந்திருக்க 
எள்ளி நகையாட இங்கேதுமில்லை 
என்னாவியில் கலந்த மதுரவல்லியே 

ஒற்றைச் சொந்தம் ஆனவனே 
ஓராயிரம் வதம் செய்பவனே 
உயிரில் உறவை நெய்தவனே 
சுவையே சுகமே சொக்கநாதா 

வரிகளும் நரையும் வருடங்கள் 
வரைந்து சென்ற நேரத்திலே 
வளர்ந்து நிறைந்த வரமானவளே 
வடிவுக்கரசியே என் பூரணியே 

கோலமும் காலமும் மாறினாலும் 
கரைகள் அணைக்கின்ற நதியாக 
கணங்கள் இனிக்கும் நற்கதியாக 
காக்கின்றாய் கருத்தாய் சுந்தரேசா 

ஆணும் பெண்ணுமாய் நாமே அவதரித்து 
பிறவிகள்தோறும் இயல்பாய் சங்கமித்து 
பெயர்கள் மாறி வாழும் நியமத்திலே 
பேறுகள் மாறாத நியதிதானென்னே 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community