அதிசயமோ அருமையான தத்துவமோ
அரிதாக இடறியது போல் சிக்கியதோ
காலையிலே படித்த கதையிது கேளீர்
சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி
வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே
விடிந்த பொழுதை கொண்டாடவென்றோ
குருவியொன்று குரலெடுத்துப் பாடியதே
அவ்வழியே சென்ற எமனின் பார்வையும்
ஒரு கணம் குருவியின் மேல் படிந்ததுவே
அரண்டு போனது கூவிய குட்டிப் பறவை
அழைத்தது அவசரமாய் வலிமிகு கருடனை
கெஞ்சியது ஏழு கடல் தாண்டிய தீவிற்கே
தன்னை கொண்டுசேர்க்க வேண்டுமென்றே
இசைவுடன் கருடனும் இறகை விரித்திட
ஏறி அமர்ந்து குருவி பயணித்ததுவே
நீண்ட நேரம் நெடுந்தூரம் நிற்காமலே
இலக்கை அடைந்த பின் நிம்மதியே
இரவுக்கு முன் வீடு திரும்பும் எமனோ
காலையில் பார்த்த வனத்து மரத்தை
தாண்டுகையில் சொன்னது துணையிடம்
ஏழு கடல் தாண்டியுள்ள தீவில் இப்பொழுது
நான் கவர வேண்டிய குருவியை இன்று
காலையில் இங்கு கண்டேனேயென்று
எழுந்த வியப்பு எமனுக்கு மட்டுந்தானா
No comments:
Post a Comment