என் உள்ளம் கவர்ந்திடல் எளிதென்றோ
நீயும் மனக்கோட்டை கட்டுகிறாய்?
என் மனமெனும் கோட்டையோ
கல் போன்றது, கதவு திறவாது,
சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி
அதில் நீந்தும் கொடிய முதலை
மந்திரம் தந்திரம் நீ செய்தாலும்
வீர தீர சாகசம் பல புரிந்தாலும்
கொஞ்சிக் கெஞ்சி நின்றாலும்
வஞ்சியின் கோட்டைக்குள் வந்திட
நெஞ்சம் நெகிழ்ந்திட வேணுமே- என்றே
அன்று நங்கையர் உறுதியாய் இருந்தபோதே
வென்ற வீரர்தாம் விரைந்தே சென்றனர்
வேறிடம் நோக்கி. அந்தோ!
இன்றோ தூண்டில் மீன்கள் ஆயினர்
பெண்கள் எனும் பேதைகள்
விரட்டி வேட்டையாட தேவையின்றி
விரித்த வலையில் வீழும் மான்கள்
வசதிகள் மீதே கவனம்
அலையாய் எழும் சலனம்
பாதை மாறிய பாவைகள்
பாழும் கிணற்றில் பூவைகள்
தேகம் தாண்டிய தேவைகள் இல்லா
இவை பாலைகள் எங்கே கற்பக சோலைகள்?
No comments:
Post a Comment