இனிய மாலை வேளையிலே
அருகிலிருக்கும் பூங்காவிலே
காலாற நடந்துவிட்டு
ஆங்கமர்ந்து காற்று வாங்கி
அமைதியில் திளைக்கையில்
கண்ணெதிரே ஓர் காட்சி
வரைந்த வண்ணச்சித்திரமாய்
விரிந்த விசித்திரமென்னே
ஆவலாய் கருத்தை இழுத்து
ஆர்வமாய் கவனம் கவர
பிறந்தது ஓர் பிரமிப்பு
எனக்குள் பெரும் வியப்பு
அங்கே புல்வெளியில்
ஓர் நடுத்தர வயது தம்பதி
உட்கார்ந்திருந்தனரே
கைகளை பின்னால் ஊன்றி
இரு கால்களை நீட்டி
ஆடவன் அமர்ந்திருக்க
அவன் முகம் பார்த்தபடி
பக்கவாட்டில் திரும்பி
அமர்ந்தபடி அவள்
மிகையில்லா ஒப்பனை
பாங்கான பட்டுச்சேலை
பளிச்சென்ற தோற்றம்
முறுவல் பூத்த முகம்
ஏதோ கதைக்கிறாள்
கனிவாய் கேட்கிறான்
கலையாத கவனமும்
மாறாத புன்னகையுமாய்
தவம் போல் மௌனம்
முழுதான அங்கீகாரம்
பேசுகிறாள் பேசுகிறாள்
பேசிக்கொண்டேயிருக்கிறாள்
விழிகளை விரித்து
விரல்களை அசைத்து
அபிநயம் பிடித்து
அனுபவித்து பேசுகிறாள்
என்னதான் பெருங்கதையோ
சிறுமியாய் கன்னியாய்
வளர்ந்த நாட்களோ
கைப்பிடித்து வந்த பின்
கண்டுவிட்ட புதுமைகளோ
பக்கத்து வீட்டு சங்கதியோ
உள்வீட்டு விவகாரமோ
பிறந்த வீட்டு பெருமைகளோ
புக்ககத்து புகார்களோ
கற்பனை முத்துக்களோ
எதிர்காலத் திட்டங்களோ
உலகத்து நடப்புகளோ
தொலைக்காட்சி தொடர்கள்
தாக்கத்தில் விமர்சனங்களோ
என்னதான் பேசினாள்
எட்ட இருந்த என் காதுக்கு
எட்டவில்லை அவள் குரல்
இதமான காற்று வெளியிலே
அவன் அமைதி அழகு
ஆமோதிக்கும் ரசனையில்
அனுசரணை தெரிந்தது
இயல்பான இசைவிருந்தது
பஞ்சு போல் மனதையாக்கும்
இன்பமான தருணங்கள்
அரிய அன்னியோன்யங்கள்
அவசியமான பொழுதுகள்
தாம்பத்ய இலக்கணங்கள்
விளக்கும் அக்கணங்கள்
மௌனத்தால் ஊக்கியவன்
மனமறிந்த மணவாளன்
மனம் திறந்த மணவாட்டி
அவளா பாரதி கண்ணம்மா
ஆம் புதுமைப் பெண்ணம்மா
உயிர் கலந்த தோழியம்மா
தோளமர்ந்த கிளியம்மா
தொய்வில்லா வாழ்வம்மா
கண் நிறைந்த காட்சியம்மா
அற்பமாய் அடித்துக் கொண்டு
குரோதத்தில் குமைந்து
விரோதங்கள் வளர்த்து
உறவு நலன் சிதைத்து
உருக்குலையும் குடும்பங்கள்
சின்னத்திரையில் மட்டுமே
என்னைச் சுற்றிய உலகத்தில்
சிங்கார சங்கீதம் இசைக்கிறது
கேட்டு மகிழ்வதென் பாக்கியம்
No comments:
Post a Comment