காலமும் ஓடுது புரவி கட்டிய ரதமாய்
சகடங்கள் உருளுது கற்கள் பொடிபட
சங்கடங்கள் புரளுது பூகம்பங்களாய்
சந்ததிகள் மாறுது புரட்சிகரமாய்
கொண்டையை சிலுப்பி கர்வமாய்
கோழிகளை மேய்க்கும் சேவலே
என் கொக்கரிப்பை கொஞ்சம்
பாரடா என்றது பெட்டைக் கோழி
பொல்லாத தோகையை விரித்து
ஆணவமாய் ஆடும் ஆண்மயிலே
அகங்காரம் எனக்குமுண்டு என்
அகவலை கேளேனென்றது பேடை
பிடரியை சிலிர்த்து வீரமாய் கர்சிப்பாய்
வேட்டையாடி நான் கொடுக்க உண்பாய்
வேடிக்கைப் பார்த்து நிற்பாய் நான் பேணிட
நானும் சுகமாய் திரிவேனென்றது சிங்கராணி
திமிலோடு திமிர் வளர்த்த பொலிகாளையே
கொம்பையாட்டி குளம்பால் மண் உதைப்பாய்
கட்டிய பசு நான் இன்று கட்டவிழ்த்தேன்
என் எக்காளம் எப்படியென்று கேட்டுக்கொள்
தொல்லையில்லா தூரத்தில் நிலவுப்பாட்டி
தொலைநோக்காய் கீழே பார்க்கிறாள்
தாடையிலே கை வைத்து வியக்கிறாள்
கோராமையென்னயிது பூலோகத்திலே
No comments:
Post a Comment