ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே
அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே
சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம்
அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம்
தானமாய் மேலும் மணிகள் தந்தானாம்
கண் மயங்கி கலந்தனர் மணிகளை
கை நிறைய அள்ளினர் கோர்த்தனர்
ஈடில்லா ஆரமொன்றை கண்டனர்
ஈரைந்து திங்கள் சென்ற பின்னே
நிறமும் உயரமும் என்னவாயிருக்குமோ
நோயும் பலமும் எப்படியிருக்குமோ
காது மடலின் வளைவிலே
கண்ணின் நீண்ட இமையிலே
செதுக்கிய மூக்கின் நுனியிலே
எழும்பும் அழுகை குரலிலே
எட்டிப் பார்ப்பதாரோ ஆரோ
எவ்வழி பாட்டியோ தாத்தாவோ
எத்தனை தலைமுறைக்கு முன்னுதித்த
ஏதோவொரு மாமனோ மச்சானோ
என்னவொரு விந்தையிதுவோ
ஆலின் ஆழ விழுதுகளோ
பாசவயலின் பயிர்தானோ
பசுமையானதே பரம்பரையே
No comments:
Post a Comment