Monday, October 12, 2015

சிரிக்க மாட்டாயோ

IndiBlogger - The Indian Blogger Community ஆரிய உதடும் திராவிட உதடும்
ஆர்வமாய் உறவாடியிருக்க
அவனியதில் களிப்பேறியிருக்க
என்னவளின் சின்ன உதடுகள்
சிறு சிரிப்பும் சிந்தாததேன்
என் சிந்தை மிக நொந்ததேன்
முல்லைப்பூ இதழலளவேனும்
சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ

பெண்ணே புகையிலையல்ல நீ
வாசமிழந்து போய்விடுவதற்கு
காசா பணமா சிரிப்பதற்கு
செலவில்லா செயலல்லவோ
கருமி போல் காரிகையே
காத்து என்ன செய்வாயோ
காத்து நான் நிற்கின்றேன்
சொர்க்கவாசல் திறக்குமென
மாதுளை இதழ்களிடையே
பச்சரிசி பல்வரிசை பார்த்திடவே
கண நேர மின்னலில்
கண் கூசிப் போவதுபோல்
இருண்ட மன வானிலே
ஒளிவெள்ளம் பாயுமென
தவமான தவமிருந்து
தவித்துக் கிடந்த பின்னே
தடாகத்துத் தாமரை போல்
குவிந்த மொட்டு திறந்தது
குமிழ் சிரிப்பும் பிறந்தது

அந்தோ!விரிந்த மலரும் மூடுமோ
மீண்டும் மொட்டாய் மாறுமோ
விந்தையென்ன விந்தையோ
விளங்காத மர்மமோ
மறுபடியும் மெளனமோ

கொத்தாய் சிரிக்கும் கொடிமலராய்
நீ சிரித்திருக்கக் கூடாதோ
விரிந்திருக்கும் புது மலராய்
பூத்தே இருக்கக் கூடாதோ
பூட்டிப் பூட்டி வைப்பதேன்
புன்னகைதான் பொன்னகையோ
பொல்லாத கள்ளியே
கொள்ளையடித்தவளே
முள்ளால் மூடியவளே

சுலபமாய் உதட்டில் ஒட்டிய சிரிப்புடனே
சுதந்திரமாய் சுந்தரிகள் சுற்றிவர
அரிதாய் சிரிப்பவளே 
அரிதாய் இருப்பவளே
அரிதாய் இருப்பதே
ஆர்வம் தருவதே
அரிதான கருத்தினை
அறிந்தேன் அரிவையே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community